முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேயிலை தொழிற்சாலை பொன்விழா: முதல்வர் பங்கேற்கிறார்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

ஊட்டி, ஜன.4 - எடக்காட்டில் இன்று(4-ந் தேதி) நடைபெறும் குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை பொன்விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு விழாமலரை வெளியிடுகிறார். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள எடக்காட்டில் மாவட்டத்திலேயே முதன்முதலில் அமைக்கப்பட்ட குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி  தொழிற்சாலைக்கு பொன்விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு இன்று(4-ந் தேதி) விழா நடைபெறுகிறது. எடக்காடு மட்டத்தில் இன்று பகல் 1.15 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் பொன்விழா மலரை வெளியிட்டு, இண்ட்கோசர்வின் புதிய 250 கிராம் `ஊட்டி டீ' விற்பனையை ஆவின் விற்பனையகங்களில் விற்பனையை துவக்கி வைத்து பேசுகிறார். தொடர்ந்து தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

விழாவில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் ஹர்மந்தர் சிங் வரவேற்று பேசுகிறார். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அரசு செயலர் கி.தனவேல் பொன்விள விளக்கவுரையாற்றுகிறார். அரசு தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் புத்தி சந்திரன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், மாவட்ட ஊராட்சி தலைவர் மேனகா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சாந்தி, பிக்கட்டி பேரூராட்சி தலைவர் ஜெபமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இண்ட்கோசர்வ் தனி அலுவலர் த.உதயசந்திரன் நன்றி கூறுகிறார். விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

விழாவில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 1-ந் தேதி சென்னையிலிருந்து கோடநாடு வந்து தங்கியுள்ளார். 4-ந் தேதி கோடநாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் புது அட்டுபாயில் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி, அங்கிருந்து கார்மூலம் விழா நடைபெறும் அரங்கை அடைகிறார். முதல்வர் வரும் வழியில் புது அட்டுபாயில் முதல் எடக்காடு மைதானம் வரையுள்ள சாலையில் செண்டை மேளம், தாரை தப்பட்டை, காவடி ஆட்டம், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் ஆகியவற்றுடன் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி முற்றிலும் கிராமப்பகுதியாக இருப்பதால் தங்கள் பகுதிக்கு வரும் முதல்வரை வரவேற்க ஏராளமான மக்கள் தயாராகியுள்ளனர். முதல்வர் நிகழ்ச்சியையொட்டி மாவட்டத்திலுள்ள காவலர்களுடன் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்