முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குள்ளநரிக் கூட்டம் - திரைவிமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஏப்,18 ​ - நதியில் விழுந்த மாதிரி சலனமில்லாமல் செல்லும் திரைக்கதை. ஆங்காங்கே அள்ளி வீசப்படும் நகைச்சுவை என்று இந்த நரிக்கூட்டத்தில், ஆளை மிரட்டும் ஊளை சப்தம் இல்லை என்பதுதான் முதல் அட்ராக்ஷன்! முதல் பாதி ஒரு கதையும் இரண்டாம் பாதி ஒரு கதையுமாக தொடர்வதும், இரண்டுமே மனசை இடறிவிட்டு போவதுமாக ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல படம்! எம்.பி.ஏ. படித்துவிட்டு வேலை தேடும் விஷ்ணுவுக்கு சொல்லி வைத்தாற்போல காதல் வருகிறது. அதுவும் செல்போனுக்கு டாப் அப் பண்ணும்போது நம்பர் தவறி ரம்யா நம்பீசனின் செல்போனில் ரீசார்ஜ் ஆகிவிட, ஏங்க... அந்த ஆயிரத்து ஐநூறு ரூபாயை திருப்பி கொடுத்திருங்க. எங்கப்பாவோட பணம் என்று கெஞ்ச ஆரம்பிக்கிறார் விஷ்ணு. பைசா பாக்கியில்லாமல் வந்து சேர்வதற்கு முன்பாகவே ரம்யா நம்பீசனின் மனசு சுளையாக வந்துவிடுகிறது விஷ்ணுவிடம்! போலீஸ் என்றாலே பிடிக்காத விஷ்ணுவின் அப்பாவுக்கு மகனே போலீஸ் வேலைக்கு போனால்தான் ரம்யா கிடைப்பார் என்பதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? விஷ்ணு போலீஸ் ஆனாரா? அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தாரா? என்று சுலப முடிச்சுக்களோடு பரபரக்கிறது பிற்பாதி! இந்த படத்தை பொறுத்தவரை பல காட்சிகள் விஷ்ணுவின் டாக் டைம் தான்! அப்பா கொடுத்த பணம் அனாமத்தாக போய்விட, அதை சமாளிக்க அண்ணனின் கம்பெனியில் கை நீnullட்டுவதும், பின்பு அதை திருப்பி கொடுப்பதற்குள் அண்ணனை திண்டாட விடுவதுமாக ரவுசு கட்டுகிறார் விஷ்ணு. இவரும் ரம்யா நம்பீசனும் காதல் வளர்க்கிற காட்சிகள் குட்டி குட்டி கவிதைகள். பணத்தை கொடுக்க வருகிற ரம்யா நம்பீசன், விஷ்ணுவை பார்த்ததும் தோழியின் தாவணியை உருவி போட்டுக் கொண்டு வந்து நிற்பதெல்லாம் அழகு. அதுமட்டுமா, அவரே மூக்கும் முழியுமாகதான் இருக்கிறார். கோவிலுக்கு வரும் விஷ்ணுவின் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக் கொள்ள ரம்யா செய்யும் டெக்னிக்குகளை இனி பல ஜோடிகள் ஃபாலோ செய்யக்கூடும்! பிற்பாதி முழுக்க போலீஸ் அகடமி ரகசியங்கள். அட இப்படியெல்லாம் நடக்குமா என்ற அதிர வைக்கிறார்கள். குறைந்தபட்ச நம்பிக்கையை விதைக்கும் அந்த காட்சிகள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரியும் லட்சிய இளைஞர்களுக்கு பாடம்! ஆனால் திடீரென்று சேரும் நண்பர்கள் ஒண்ணு மண்ணா திரிவதும், பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகளையே கடத்துகிற முயற்சியில் ஈடுபடுவதும்தான் அஹ்ஹ்ஹ்.... பெரிய நட்சத்திர கூட்டத்தில் தனித்து ஜொலிக்கிறார்கள் விஷ்ணுவின் அம்மாவும், அப்பாவும். தோழியாக நடித்திருக்கும் அந்த ப்ரியா மிதுனும் கூடத்தான்! போலீஸ் அதிகாரியின் மகன் நடித்த படம் என்பதாலோ என்னவோ, தமிழ்சினிமாவுக்கு பர்மிஷன் கிடைக்காத நாயக்கர் மஹால், எம்.எல்.ஏ. ஆஸ்டல் போன்ற இடங்களில் அனுமதி கிடைத்திருக்கிறது.  சொந்த தொகுதி மக்களிடமே எம்.எல்.ஏ வெளியே போயிருக்காரு என்று சமாளிக்கும் சிட்டிங் எம்எல்ஏ வின் சீன் செம ஜாலி... லஷ்மணனின் ஒளிப்பதிவு, காசிவிஸ்வநாதனின் எடிட்டிங் இவற்றுடன் சரியான விதத்தில் மிக்ஸ் ஆகியிருக்கிறது செல்வகணேஷின் இசையும். குறிப்பாக விழிகளிலே... பாடல் இந்த வருடத்தின் மனசை வருடும் மெலடி! புதுமுக இயக்குனர் ஸ்ரீபாலாஜி நரிமுகத்தில்தான் விழித்திருக்கிறார்.விஷ்ணுவின் காட்டிலும் அடைமழை தான் வளர்ந்துவரும் இளம் நடிகர்களின் வரிசையில் விஷ்ணுவை உயர்த்திவிட்டது `குள்ளநரி கூட்டம்'.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்