முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரியை கட்டாதவர்களுக்கு கடுமையான சட்டம் போடவேண்டும்

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன. - 8 - அரசாங்கத்திற்கு வரியை கட்டாதவர்களுக்கு கடுமையான சட்டம் போட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.  இதுபற்றிய விபரம் வருமாறு:- மத்திய அரசு சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு புதிதாக சேவை வரி விதித்துள்ளது. 12.6 சதவிகித இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் திரைப்பட துறையை சார்ந்த அனைத்து தொழிலாளர்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, ரஜினிகாந்த், சத்யராஜ், பாண்டியராஜ், கே.பாக்கியராஜ், விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா, விஷால், அருண்விஜய், பிரசாந்த், பிரசன்னா, கஞ்சா கருப்பு, விஜயகுமார், தியாகு, மனோபாலா, பிரபு, விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, விவேக், செந்தில், அப்புக்குட்டி, டெல்லி கணேஷ், வாகை சந்திரசேகர், எஸ்.வி.சேகர், மன்சூர் அலிகான், வி.எஸ்.ராகவன், ராஜேஷ், பொன்வண்ணன், நடிகைகள் ரோகிணி, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, ஊர்வசி, ரோஜா, சினேகா, மும்தாஜ், வடிவுக்கரசி, இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், வஸந்த், சுந்தர் சி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.ஆர்., கலைப்புலி தாணு, எல்.சுரேஷ், அன்பாலயா பிரபாகர், கே.ராஜன், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், அண்ணாமலை, பைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், யார் கண்ணன் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது:-

ரஜினிகாந்த்:

இந்த சேவை வரி எதிர்ப்புக்கு நான் ஆதரவு தருகிறேன். அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று புது புது திட்டங்கள், முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில் சேவை வரி என்பது கருப்பு பண புழக்கத்திற்கு வழி வகுத்துவிடும். அதே நேரத்தில் அரசாங்கம் விதிக்கும் வரியை கட்டாதவர்கள் மீது கடுமையான சட்டம் போட வேண்டும். அப்படி செய்தால் புதிய சேவை வரி தேவைப்படாது.  

விவேக்:

கலைஞர்கள் ரொம்பவம் தெம்பாக இருக்கிறார்கள் என்று அரசாங்கம் இந்த சேவை வரியை விதித்திருக்கிறது. மதன்பாபு உடல் சைசை பார்த்து வரி போடக் கூடாது. மனோபாலா சைசையும் பார்க்க வேண்டும். நடிகர்களுக்கு பென்ஷன் கிடையாது. எத்தனை நாள் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூற முடியாது. புயல், வெள்ளம், சுனாமி ஆகியவை வரும்போது முதலில் குரல் கொடுப்பவர்கள் நடிகர்கள்தான். ஒரு படம் நல்ல படமாக இருந்தால் அதை விளம்பரப்படுத்த அதிக செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் அது வெற்றி படமாகிறது. சினிமாவில் இவ்வளவு சிக்கல் இருக்கும்போது சேவை வரி என்பது மிகவும் கஷடமானது. 

1970 ஆம் ஆண்டு சீனாவுடன் போர் ஏற்பட்டபோது நம்முடைய நடிகர்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர்., சந்திரபாபு என பலர் கலைநிகழ்ச்சி நடத்தி, அதில் வசூலான நிதியை அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார்கள். இப்படி எவ்வளவோ சம்பவங்களை சொல்ல முடியும். எனவே சேவை வரியை ரத்து செய்யுங்கள்.

டெல்லி கணேஷ்:

கார்கில் போர் நடந்தபோது நம்முடைய கலைஞர்கள்தான் ராணுவ வீரர்களை சந்தோஷப்படுத்தினார்கள். தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க கூட்டம் சேர்க்க அரசியல்வாதிகள் எங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். இதை மனதில் வைத்து சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். 

கே.ராஜன்:

சுதந்திரம் வாங்கி 61 வருஷமாச்சி. இன்னும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை அரசாங்கத்தால் காப்பாற்ற முடியவில்லை. டெல்லியில் இருக்கும் மந்திரிகள் உயரத்தில் அமர்ந்து கொண்டு மக்கள் குறைகளை பார்க்க மறந்து விடுகிறார்கள். சினிமாவில் ஒரு சிலர் வெள்ளையாக இருப்பார்கள். மற்றவர்கள் எல்லோரும் கருப்பாக இருப்பார்கள். ஆனால் எல்லோரும் ஏசியில் வாழ்கிறவர்கள் அல்ல. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி விளம்பரம் வருமாபோது நாங்கள் அரசுக்கு தேவைப்படுகிறோம். ஆட்சி மாற்றங்கள் கூட சினிமாக்காரர்களால் தான் நிகழ்ந்திருக்கிறது.   

எம்.ஜி.ஆர். கூட நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. அவர் இறந்தபோது வறுமையில்தான் இறந்தார். இப்படி எத்தனையோ நடிகர்கள் வறுமையில் வாழ்ந்து இறந்திருக்கிறார்கள். சினிமாவில்  இருப்பவர்கள் வேறு தொழில் செய்வதில்லை. பட வாய்ப்புகள் இல்லாதவன் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அரசாங்கம் உதவி செய்யுமா? இதை நினைத்து சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். 

ராதாரவி:

சினிமா தொழிலை விட பிச்சை எடுக்கும் தொழில் சிறந்ததாக தெரிகிறது. காரணம், சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரில் ஒரு பிச்சைக்காரன் சாக்கு மூட்டை நிறைய சில்லரை காசு வைத்திருக்கிறானாம். அவனுக்கு வரி இல்லை. சிதம்பரம் வேறு மொழிக்காரர் அல்ல. நம் மொழி அவருக்கு தெரியும். இந்த சேவை வரி குறித்து முடிவு செய்ய வேண்டும். சினிமாக்காரனுக்கு வேறு தொழில் தெரியாது. நாங்கள் வாழ்ந்தால் மொத்தமாக வாழ்வோம். வீழ்ந்தால் மொத்தமாக வீழ்வோம். இந்த சேவை வரியை ரத்து செய்யவில்லையென்றால் கோர்ட்டில் ஸ்டே வாங்குவோம். 

சீனாவுடன் போர் நடந்தபோது லால்பகதூர் சாஸ்திரியை சந்தித்து தன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கலியை கழட்டிக் கொடுத்தவர் கமலம்மாள் ஒரு நடிகை என்பதை மறக்க கூடாது. அதே நேரத்தில் கார்கில் போர் நேரத்திலும் திரையரங்கினரின் பங்களிப்பையும் யாரும் மறக்க முடியாது. இதையெல்லாம் நினைத்து இந்த சேவை வரியை ரத்த செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர்கள் பேசினார்கள். 

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தங்களுடைய எதிர்ப்பை சுருக்கமாக எடுத்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

படவிளக்கம்:

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைஉலகினர் சேவை வரியை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார், ரஜினி காந்த், ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜயகுமார் மற்றும் பலர் உள்ளனர்.  

                    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்