முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானிய எரிவாயு சிலிண்டர் விலை ரூ.65 உயருகிறது?

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 10  - மானிய விலையில் கொடுக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை 130 ரூபாய் உயர்த்த, அதாவது ரூ. 65 ஐ உடனடியாக உயர்த்தி அமலுக்கு கொண்டு வரவும், மீதமுள்ள 65 ரூபாயை மார்ச் மாதத்துக்குள் உயர்த்த வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 

மத்திய அரசு, திட்ட செலவுகளை அதிகரிப்பதற்காக அத்தியாவசியப் பொருட்களுக்கு மானியம் கொடுப்பதை குறைத்து வருகிறது. முதற்கட்டமாக மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக கடந்த ஆண்டு மத்திய அரசு நிர்ணயம் செய்து அறிவித்தது. அதனை 9 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனினும் மத்திய அரசு தனை கண்டுகொள்ளவே இல்லை. இது நாடெங்கும் உள்ள மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் மானிய விலையில் மக்கள் பெற்று வரும் சமையல் கியாஸ் விலை மீண்டும் உயரும் அபாயம் உருவாகி உள்ளது. மானிய விலையில் சிலிண்டர்களை வினியோகம் செய்து வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய மூன்றும், தங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உடனே உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளன. இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசுக்கு செய்துள்ள பரிந்துரையில் 2013 ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலக் கட்டத்துக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 130 உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளன. இந்த தொகையில் ரூ. 65 ஐ உடனடியாக உயர்த்தி அமலுக்கு கொண்டு வரவும், மீதமுள்ள 65 ரூபாயை மார்ச் மாதத்துக்குள் உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரதமர் மன் மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை கூடி ஆலோசிக்க உள்ளது. எனவே சமையல் கியாஸ் விலை உயர்வு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கைபடி விலை உயர்த்தப்பட்டால் மானிய விலையில் வாங்கும் சமையல் கியாசுக்கு மக்கள் ரூ. 465 முதல் ரூ. 475 வரை கொடுக்க வேண்டியதிருக்கும். 

இதற்கிடையே எண்ணை நிறுவனங்கள் மற்றொரு கோரிக்கையும் வைத்துள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒரு தடவை சமையல் கியாஸ் விலையை தலா ரூ. 50 வீதம் உயர்த்த எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுவும் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளது. தற்போது பொதுமக்கள் சமையல் சிலிண்டரை மானிய விலையில் ரூ. 398 க்கு வாங்குகிறார்கள். மானியம் இல்லாத விலையில் ஒரு சிலிண்டருக்கு ரூ. 890 அல்லது ரூ. 900 வரை மக்கள் கொடுக்கிறார்கள். ஏற்கனவே மானிய விலை சிலிண்டர்கள் வாங்கி முடிக்கப்பட்டு விட்டதால் மாதந்தோறும் கியாசுக்கு மட்டும் கூடுதலாக ரூ. 500 செலவிட வேண்டியதுள்ளது. இந்த நிலையில் மானிய விலை சிலிண்டரும் விலை உயரும் என்று கூறப்படுவதால் நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் கூடுதல் சுமை அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்