முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயலுக்கு கண்டனம்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.10 - எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. துப்பாக்கி சண்டையில் பலியான இந்திய வீரர்கள் 2 பேர்களின் உடல்களை துண்டாக வெட்டியது மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான செயல் என்றும் இந்தியா கண்டித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச்மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணமடைந்தனர். அவர்களின் உடல்களை மரியாதையாக ஒப்படைக்காமல் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெறித்தனமாகவும் மிருகத்தனமாகவும் அந்த இரண்டு வீரர்களின் தலைகளை துண்டித்துள்ளனர். இதனால் இந்தியா ஆத்திரம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஹைகமிஷனர் சல்மான் பசீரை அழைத்து இந்த கண்டனத்தையும் எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு எல்லைப்பகுதியில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் அந்தோணி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடந்துள்ளது. துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களின் உடல்கள் சின்னாபின்னமாக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அந்தோணி கூறினார். இந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் இந்த மாதிரி நடந்து கொண்டது கண்டித்தக்கது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசிடம் மிகவும் கண்டிப்புடன் கூறப்படும் என்றும் சல்மான் தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எல்லையில் இந்தமாதிரியான சம்பவங்கள் நடந்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் பாகிஸ்தானை குர்ஷித் கடுமையாக எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம் நடந்துகொண்ட இந்த மிருகத்தனமான சம்பவத்தை பாரதிய ஜனதாவும் கண்டித்துள்ளது. இது இந்தியாவுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். பாகிஸ்தான் நடந்துகொள்ளும் முறை குறித்து ஆதாரங்களுடன் சர்வதேச சமுதாயத்திடம் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்படும் என்றும் பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. 

துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஹெம்ராஜ், சுதாகர்சிங் ஆகியோர் வீரமரணமடைந்தனர். அவர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் வெறித்தனமாக தலைகளை துண்டித்துள்ளனர். அதோடுமட்டுமல்லாது அந்த இரண்டு பேர் தலைகளில் ஒருவரின் தலையை தீவிரவாதிகள் எடுத்துச்சென்றுவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்