முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ராணுவ புரட்சி வெடிக்கும் அபாயம்..!

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன. 17 - பாகிஸ்தான் பிரதமராக இருந்த யூசுபர் ரசாக் கிலானி, அதிபர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கில் சுவிட்சர்லாந்து அரசிடம் தகவல்களை கோரி கடிதம் எழுதுமாறு பணித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத காரணத்தால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 ம் தேதி செவ்வாய்க் கிழமையன்று பதவியை இழந்தார். 

இதைத் தொடர்ந்து ராஜா பர்வேஸ் அஸ்ரப் பாகிஸ்தான் பிரதமரானார். அதிபர் ஜர்தாரி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக புதிதாக விசாரணை தொடங்க கோரி சுவிட்சர்லாந்து அரசுக்கு அஸ்ரப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதி அனுப்பியது. இந்நிலையில் எதிர்பாராத திருப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது. ராஜா பர்வேஸ் அஸ்ரப் முன்பு நீர்வளம் மற்றும் மின்சார துறை மந்திரியாக இருந்த போது மின் திட்டங்களை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் கணிசமான தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(கியூ பிரிவு) கட்சி எம்.பி. மக்தூம் பைசல் ஹயாத், உச்சநீதிமன்றத்தில் 2009 ம் ஆண்டு தொடுத்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளது உண்மைதான் என்பதை உச்சநீதிமன்றம் கண்டறிந்தது. இது தொடர்பாக அரசு அளித்த எல்லா ஒப்பந்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. பிரதமர் ராஜா பர்வேஸ் அஸ்ரப் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொறுப்புடைமை அமைப்புக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

ஆனால் தேசிய பொறுப்புடைய அமைப்பு அடுத்தகட்ட நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலாந மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேசிய பொறுப்புடைமை அமைப்பு தலைவவ் பாசி புகாரிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பாகிஸ்தான் பிரதமர் ராஜா பார்வேஸ் அஸ்ரப்பையும், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற 15 பேரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தேசிய பொறுப்புடைமை அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனால் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரிக்கும், பிரதமர் அஸ்ரப்புக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஜர்தாரி தலைமையிலான ஆட்சியை தூக்கியெறிய கோரி மதகுரு தாஹிர் உல்காத்ரி தலைமையில் நடத்தப்பட்ட பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமென்று காத்ரி வற்புறுத்தி வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவுக்கும், காத்ரியின் போராட்டத்திற்கும் இடையே தொடர்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அஸ்ரப் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே தெக்ரிக் மின்ஹஜ் உல்குரான் என்ற அமைப்பின் தலைவராக காத்ரி தனது உரையில் அஸ்ரப்பை முன்னாள் பிரதமர் என்றும், ஜர்தாரியை முன்னாள் அதிபர் என்றும் குறிப்பிட்டார். 

இதற்கு பின்னனியில் சதி திட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் கொந்தளிப்பு உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆட்சியை கைப்பற்றும் ராணுவ தளபதிகள் முயற்சி செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் ராணுவ புரட்சி வெடிக்கும் அபாயம் வலுத்து வருகிறது என்று இஸ்லாமாபாத் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்