முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானை சுருட்டி வீசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, ஏப்.- 19 - ஐ.பி.எல். போட்டித் தொடரில் கொல்கத்தாவின் அனல் பறந்த பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுருண்டது. மேலும் இந்த ஐ.பி.எல். தொடரில்  மிகக் குறைந்த ரன்களையும் ராஜஸ்தான் அணி பதிவு செய்தது. காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐ.பி.எல்.லின் 17-வது போட்டியில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதனால் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் பவுனிக்கர் ஆகியோர் களமிறங்கினர். துவக்க வீரர்கள் அதிரடியாக துவக்கினர்.  அணியின் எண்ணிக்கை 24 ஐ எட்டியபோது அபாயகரமான வீரர் வாட்சனை, கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கிளீன் போல்டு செய்தார். அடுத்ததாக பாஸல் களமிறங்கினார். மேலும் 4 ரன்கள் அணியின் எண்ணிக்கையில் சேர்ந்தபோது மற்றொரு துவக்க ஆட்டக்காரர் பவுனிக்கரும் 15 ரன்கள் எடுத்த நிலையில் இக்பால் அப்துல்லாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிஸ்லாவால் ஸ்டெம்ப் அவுட் செய்யப்பட்டார். இதனால் ராஜஸ்தான் அணி 4.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து ரவத் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 38 க்கு உயர்ந்தபோது 3 ரன்களை எடுத்திருந்த பாஸல், இக்பால் அப்துல்லாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். அணியின் எண்ணிக்கை   மேலும் 5 ரன்கள் உயர்ந்து 43 ரன்களை எட்டியபோது 11 ரன்களை எடுத்திருந்த ரவத் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் பொறுப்பற்ற ஆட்டம் தொடர்ந்ததால் அந்த அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தது. அந்த அணியின் மீனாரியாவின் அதிகபட்ச ஸ்கோரே 21 தான். இவர் பாலாஜியின் பந்துவீச்சில் பாட்டியாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்களை மட்டும் எடுத்தது. இதுவே 4 வது ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா தரப்பில் பாலாஜி 3 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல்ஹசன் 2 விக்கெட்டுகளையும், பிரட்லீ, இக்பால் அப்துல்லா, இர்பான் பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
20 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. ஆனால் அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் காலிஸ் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஷேன் டைட்டின் பந்துவீச்சில் விழுந்தார். அடுத்ததாக கொல்கத்தா கேப்டன் காம்பீர் களமிறங்கினார். இலக்கு எளிதானதால் நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் விளையாடினர். அணியின் எண்ணிக்கை 31 ஐ அடைந்தபோது மற்றொரு துவக்க வீரரான பிஸ்லா 22 பந்துகளில் 9 ரன்களை எடுத்த நிலையில் வார்னேவின் சுழலில் விழுந்தார். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய மனோஜ் திவாரி மற்றும் காம்பீர் ஜோடி இலகுவாக இலக்கை அடைந்தது. கொல்கத்தா அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்களை எடுத்தது. காம்பீர் ஆட்டமிழக்காமல் 35 ரன்களையும், திவாரி ஆட்டமிழக்காமல் 30 ரன்களையும் எடுத்தனர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
3 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய லட்சுமிபதி பாலாஜி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.    
படுதோல்வி  குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் வார்னே, தங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆடியதே அணியின் தோல்விக்கு காரணம் என்று தெரிவித்தார். மேலும் தனது அணி வீரர்கள் குழந்தைத்தனமாக செயல்பட்டனர் என்றும் தெரிவித்தார். இருந்தாலும் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக தமது அணி செயல்படும் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்