முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுவார்த்தைக்கு பாக்., அழைப்பு: இந்தியா நிராகரிப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.19 - எல்லையில் பதட்டத்தை தணிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து வெளியுறவு அமைச்சக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது. 

எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த மீறலில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். இந்திய எல்லைக்குள் வந்து இந்திய ராணுவ வீரர்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வருகின்றனர். இதனால் இந்திய வீரர்கள் பலர் வீரமரணமடைந்துள்ளனர். கடந்த 8-ம் தேதி அன்று பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் ஒருவரின் தலையையும் துண்டித்துக்கொண்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. மேலும் ராணுவ வீரரின் தலையை திரும்பத்தராவிட்டால் பயங்கர விளைவை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்தது. இதனையொட்டி எல்லைப்பகுதியில் பதட்டம் அதிகரித்தது. இந்தநிலையில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி ஹர் கூறுகையில் இந்தியா போரை தூண்டும் வகையில் நடந்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார். பின்னர் திடீரென்று தனது போக்கை மாற்றிக்கொண்டு எல்லையில் பதட்டத்தை தணிக்க இந்தியாவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தார். ஹர்வின் இந்த அழைப்பை இந்தியா நிராகரித்துவிட்டது. அவசரக்கோலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். எல்லையில் பதட்டத்தை தணிக்க பேச வேண்டியது இருநாட்டு ராணுவ ஜெனரல்கள்தான் என்றும் அவர் கூறியுள்ளார். போர்நிறுத்தத்தை ஒருபோதும் மீறக்கூடாது என்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்தநாட்டு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் குர்ஷித் யோசனை கூறினார். எடுத்தவுடனே உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தையை தொடங்க முடியாது. வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டத்தில் பேச வேண்டுமானால் முதலில் இருநாட்டு அரசுகளின் தலைமையிடையே தொடர்புகொள்ள வேண்டும். அதனால் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு பல நடவடிக்கைகளை முதலில் எடுக்க வேண்டும் என்றும் குர்ஷித் மேலும் கூறினார்.

எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய கேபினட் கூட்டத்தில் சல்மான் குர்ஷித்தும், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் விளக்கினர். பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்பதை பொருத்திருந்து கவனித்து வருகிறோம் என்றும் ஏ.கே. அந்தோணி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்