முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெக்கானிடம் பணிந்தது டெல்லி

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.20 - ஐ.பி.எல். போட்டிகளில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 19-வது போட்டியில் சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சங்ககாரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சன்னி சோகால் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர். சோகல் தனக்கு வீசப்பட்ட முதல் பந்தை அருமையான கவர் டிரைவ் மூலம் 4 ரன்களாக மாற்றினார். தவான் தன் பங்கிற்கு இரண்டு பவுண்டரிகளை அடித்தார். ஆனால் 8 ரன்கள் எடுத்த தவானை, இர்பான் பதான் கிளீன் போல்டு செய்து அவுட்டாக்கினார். இதையடுத்து அணியின் கேப்டன் குமார் சங்ககாரா, சோகலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. அதிலும் சங்ககாரா சுழல் பந்துவீச்சை சூறையாடினார். குறிப்பாக நதீம் வீசிய முதல் ஓவரில் மிட் ஆன் திசையில் ஒரு சிக்சரையும், மேலும் இரண்டு பவுண்டரிகளையும் அடித்தார். சோகல் மற்றும் சங்ககாரா இருவரும் 92 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக பெற்றனர். அணியின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தபோது 35 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்த சங்ககாரா, டிண்டாவின் பந்தில் பின்ச்சால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டார். இவரை அடுத்து கேமரான் ஒயிட் சோகாலுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் எண்ணிக்கை 129 க்கு உயர்ந்தபோது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சோகால் நதீமின் சுழலில் பின்ச்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 62. இது இந்த தொடரில் சோகாலின் முதல் அரை சதமாகும். ஒரு கட்டத்தில் டெக்கான் அணி 11 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தது. இதனால் இந்த அணி எளிதில் 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சங்ககாரா, சோகால் ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு டெக்கான் அணியின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. மேலும் டெல்லி அணியும் மிகச் சிறப்பாக பந்து வீசி டெக்கானின் ரன் வேகத்தை மட்டுப் படுத்தியது. இதனால் கடைசி 6 ஓவர்களில் டெக்கான் அணி 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது. டெக்கான் அணியின் நடுப்பகுதி ஆட்டக்காரர்களில் ஒயிட் மட்டும் சிறப்பாக விளையாடி 25 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். இதையடுத்து 20 ஓவர்களின் முடிவில் டெக்கான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது.  டெல்லி அணி சார்பாக டிண்டா, பதான், நதீம், ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.   

169 ரன்கள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக வைக்கப்பட்டது. துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் சேவாக் அதிரடியாக ஆட்டத்தை துவக்கினர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில்  4 வது ஓவரில் சேவாக் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மீத்சிங்கின் பந்துவீச்சில் கிறிஸ்டியானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ஓஜா களமிறங்கினார். இவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 33 ஆக இருந்தபோது 2 ரன்களே எடுத்திருந்த ஓஜா, கிறிஸ்டியானின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பின்ச் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஹர்மீத்சிங்கின் பந்தில் சங்ககாராவால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். 38 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாற ஆரம்பித்தது. இந்த நேரத்தில் வேணுகோபால்ராவ், துவக்க வீரர் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் ஓரளவு ரன் எண்ணிக்கையை உயர்த்தி நம்பிக்கை அளித்தனர். இந்த ஜோடியால் அணி ஓரளவு கெளரவமான ஸ்கோரை எட்டியது. ஆனால் அடிக்க வேண்டிய ரன் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்ததால் அடித்து ஆடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் அமித் மிஸ்ராவின் ஓவரில் ஒரு அழகான சிக்ஸரை அடித்த வேணுகோபால் அந்த ஓவரில் அதேபோல் சிக்ஸர் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் எடுத்த ரன்கள் 21. அடுத்து நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி அரை சதம் அடித்த வார்னர், தவானின் பந்துவீச்சில் ரவிதேஜாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 14.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களாக இருந்தது. அடுத்து வந்த இர்பான் பதான் 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, நாகர், ஹோப்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சில அதிரடியான ஷாட்களை அடித்தாலும் அது டெல்லி அணியை வெற்றி பெறச் செய்ய போதுமானதாக இல்லை. இந்நிலையில் அதிரடியாக 11 பந்துகளில் 23 ரன்களை அடித்திருந்த நாகர், கிறிஸ்டியானின் பந்தில் கிளீன் போல்டானார். இறுதியில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆட்டமிழக்காமல் ஹோப்ஸ் 17 ரன்களையும், மோர்கல் 8 ரன்களையும் எடுத்திருந்தனர். டெக்கான் அணி தரப்பில் கிறிஸ்டியான், ஹர்மீத்சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஓஜா, மிஸ்ரா, தவான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.  இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது டெக்கான் சார்ஜர்ஸ். டெக்கான் அணியின் சன்னி சோகால் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago