முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: கமல்

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - கலாச்சார தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று  பிரபல நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அமெரிக்கா சென்றுள்ள அவர் பத்திரிகைகளுக்கு அங்கிருந்து ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும் எனது திரைப்படத்துக்கும் ஆதரவாக எழுந்துள்ள குரல்களால் நான் மகிழ்ச்சி அடைந்திருக்கும் அதே நேரத்தில், எனது படம் எந்த வகையில் எனது இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானது என்று கருதக்கூடிய நிலைமை உருவானது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். 

அச்சமூகத்திற்கு ஆதரவான எனது கருத்துக்களால் அந்த சமூகத்தின் அனுதாபி என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஒரு நடிகனாக எனது கடமையை செய்யும்போது எது மனிதாபிமானம் மற்றும் பொதுத்தன்மையோ அதற்கு மேலாக பல படி மேலே சென்று  நான் எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளேன்.  

இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட `ஹார்மோனி இந்தியா' என்ற அமைப்பில் அங்கம் வகித்து இருக்கிறேன். ஒரு மதத்தை குறை கூறியதாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களால் நான் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் என்னுடைய உணர்வுகளும் உண்மையாக அவமதிக்கப்பட்டுள்ளன.  

ஒரு சிறிய குழு அரசியல் லாபத்திற்காக என்னை ஒரு வாகனமாக ஈவுஇரக்கமின்றி பயன்படுத்திக் கொண்டுள்ளது. என்னைப் போன்ற பிரபலமான நட்சத்திரங்கள் விமர்சனத்துக்கு ஆளாகும்போது அதை செய்பவர்கள் அதன் மூலம் கவனத்துக்குள்ளாகிறார்கள்.  இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எந்த ஒரு நடுநிலையான மற்றும் தேசப்பற்று மிக்க முஸ்லிம் எனது விஸ்வரூபம் படத்தை பார்க்கும் போது பெருமை அடைவது நிச்சயம். இதற்காகவே அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நான் சட்டத்தையும் யதார்த்தத்தையும் எங்கள் ஆதரவாக நம்பி நிற்கப்  போகிறேன்.  இத்தகைய கலாச்சார  தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இணைய தளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு எனது நன்றி. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்