முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய் வீடு மீது மர்ம ஆசாமிகள் கல்வீச்சு

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.20 - சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய் வீட்டின் மர்ம ஆசாமிகள் சிலர் கல்வீச்சு தாக்கினர். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவாக நிலை எடுத்ததற்காக விஜய் வீடு தாக்கிப்பட்டதாக தெரிகிறது. சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய் வீட்டின் மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், வீட்டின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. 

இதுகுறித்து போலீசில் நடிகர் விஜய் புகார் செய்துள்ளார்.

பிரபல நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடு சாலிகிராமம், ஸ்டேட் காலனி 3-வது தெருவிலுள்ளது. அரண்மனை போன்ற இந்த வீட்டின் முன்பு பெரிய தோட்டமும் உள்ளது. விஜய் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் முதலில் இங்குதான் வசித்தார். 

பின்னர், இரு ஆண்டுகளுக்கு முன்பு அடையாறில்  புதிதாக வீடுகட்டி அங்கு குடியேறினார். இதனால், சாலிகிராமம் வீடு அவரது அலுவலமாக மாற்றப்பட்டது. சமீபத்தில் இந்த வீட்டின் அருகில் தனியாக அலுவலகம் திறக்கப்பட்டது.

இதனால், சாலிகிராமம் வீடு வாடகைக்கு விடப்பட்டது. இதில் கடந்த 5 மாதங்களாக பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி குடும்பத்துடன் வாடகைக்கு இருக்கிறார். அவரது இசை ஸ்டூடியோவும் வீட்டின் முன்பகுதியில் செயல்படுகிறது. ஆனால், இந்த தகவல் பரவலாக அனைவருக்கும் தெரியவில்லை. 

இந்த சாலிகிராமம் வீட்டில் இன்னும் விஜய் குடும்பத்தினர் வசிப்பதாகவே பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் தான், இந்த வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். 2 கார்களில் வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கற்களை வீசி வீட்டி கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து விஜய் ஆன்டனி உடனடியாக நடிகர் விஜய்க்கு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு விஜய் அதிர்ச்சியடைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அவர் நேற்று காலை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில், நடிகர் விஜய்யும் அரசியல் களத்தில் குதிப்பார் என்ற பரபரபரப்பான பேச்சு எழுந்தது. அவரது சமீபத்திய திரைப்படங்களுக்கு ஆளும்கட்சி தரப்பிலிருந்து கடுமையான நெருக்கடி தரப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால், விஜய் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. திரை உலகில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க  அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் களமிறங்கினார். அவரது தந்தை இயக்குனர் எஸ்.சந்திரசேகரன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பலமுறை நேரில் சந்தித்து பேசினார்.

விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக களம் இறங்கியது.

அதே நேரத்தில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வதை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்ற அமைப்பான மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இதில், அவரது ரசிகர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், திருச்சி சுற்றுப்பயணத்தில் இருந்த ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்து பேசினார். அ.தி.மு.க. கூட்டணிக்கு வெளிப்படையான ஆதரவையும் தெரிவித்தார். பின்னர், பிரச்சாரத்தையும் தொடங்கினார். நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடந்த அ.தி.மு.க. கூட்டணி பிரச்சார கூட்டங்களில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

தனது மகன் விஜய் உத்தரவின் பேரிலேயே அ.தி.மு.க.  கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒவ்வொரு கூட்டத்திலும் மறக்காமல் கூறினார். விஜய் நற்பணி மன்றத்தினரும் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பாளர்கள் என்றும் கூறினார். 

இவ்வாறு தேர்தலில் நடிகர் விஜய் எடுத்த  நிலைப்பாடு எதிரொலியாகவே இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து நடிகர் விஜய்யின் செய்தி தொடர்பாளர் செல்வக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, தற்போது தாக்கப்பட்டுள்ள அறை முன்பு நடிகர் விஜய்யின் படுக்கை அறையாக இருந்தது. அங்கு விஜய் தங்கியிருப்பார் என்று கருதியே விஷமிகள் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். உண்மை குற்றவாளிகளை போலீசார் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் தி.மு.க. வெற்றி பாதிக்கப்படுமோ என்ற எண்ணத்தில் ஆளுங்கட்சி தரப்பு விஜய் தலைமை ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலன் மூலம் காய் நகர்த்தியது. ஆனால் அது எடுபடவில்லை. திரையுலகில் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தை ஒழிக்க ஒரே வழி அ.தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டை விஜய் எடுத்தார். இதனால் ஜெயசீலன் வடசென்னை மாவட்ட செயலாளர் ஓவியர் ராஜா உள்ளிட்ட சில நிர்வாகிகள் தி.மு.க.வுக்கு சென்று வேலை செய்தனர். அவர்களை விஜய் மன்றத்தை விட்டு நீக்கினார். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்கு நடிகர் விஜய்யை மிரட்டவே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்