முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி கவர்னரை விசாரிக்க பிரதமர் அலுவலகம் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஏப்.20 - கறுப்பு பண முதலை என்று அழைக்கப்படும் ஹசன் அலியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவருக்கு பாஸ்போர்ட் வழங்க உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் இக்பால்சிங்கை அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் விசாரிக்க பிரதமர் அலுவலகமே நேற்று அனுமதி கொடுத்து விட்டது. முன்னதாக, இவரிடம் விசாரிக்க உள்துறை அமைச்சகமும் அனுமதி கொடுத்தது நினைவிருக்கலாம்.

புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பிரதமர் அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து அது தொடர்பான அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவர்னர்கள் கடமையாற்றும் விஷயத்தில் அவர்களுக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் இது போன்ற விஷயங்களில் பிரதமர் அலுவலகத்திடம் இருந்து அனுமதி கேட்க தேவையே இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்த புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங், கறுப்பு பண முதலை ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்ததை ஒப்புக் கொண்டாராம். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது தமக்கு தெரியாது என்றும் அவர் கூறினாராம். இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இக்பால்சிங்கிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உள்ளது. அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ததற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டு வருகின்றன. இக்பால்சிங்கும் இது குறித்து விளக்கமளிக்க தயாராகவும், விருப்பமாகவும் இருக்கிறார் என்றும் தெரியவருகிறது. இருந்தாலும் புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங்கிற்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றுவதை மறுப்பதற்கில்லை. எந்த நேரமும் அவர் பதவி விலகலாம் அல்லது நீக்கப்படலாம் என்று பரவலாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்