முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக கமல் படமெடுப்பாரா

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

சென்னை, ஜன. - 28 - நடிகர் கமலஹாசன் என்றைக்குமே சமூக பொறுப்புடன் நடந்து கொள்பவர் என தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக அவர் விஸ்வரூபம் படத்தை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமல் படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இந்தியாவில் உள்ள அனைத்து படைப்பாளிகளுக்கும் வைக்கப்பட்ட தடையாக கருதுகிறேன். கமல் வியாபாரத்துக்காக தன்னை ஒரு போதும் அடகு வைத்தவர் அல்ல. கமலுக்கு என்றைக்குமே சமூக பொறுப்புணர்வு உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கலைஞர் சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக படம் எடுப்பாரா? மத்திய அரசால் அமைக்கப்பட்ட தணிக்கை குழு அங்கீகரித்த ஒரு படம் தடை செய்யப்பட வேண்டும் என்று சிலர் சொன்னால் இந்திய அரசியல் சட்டத்தில் நாம் எங்கே நின்று நியாயம் கேட்க வேண்டும் என்பது புரியவில்லை. நிகழ்வுகளை பார்த்ததை அனுபவித்ததை ஒரு சமூக வலியோடு பூடகமாக திரையில் கூறுவது படைப்பாளியின் தார்மீக படைப்பு சுதந்திரம். ஒரு நடுநிலை கலைஞனுக்கு கைகொடுக்க வேண்டியது நம் கடமை என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் பார்த்திபன் கூறுகையில், மக்கள் சக்தி மாபெரும் சக்தி. குற்றம் என தெரிந்தால் கொந்தளித்து விடுவார்கள். எனவே விஸ்வரூபம் படத்தை அவர்கள் பார்வைக்கு ரிலீஸ் செய்வோம். மக்களே சிறந்த தீர்ப்பை தருவார்கள். கமலஹாசனுக்கு ஏற்படும் நஷ்டம் மறைமுகமாக சினிமாவுக்கே. ஒரு தனி மனிதனுக்காக ஓர் இனத்தின் சினத்தை பயன்படுத்த வேண்டாம் என்பதே என் கோரிக்கை என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் அமீர் கூறுகையில், தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதி தமிழக அரசே படத்திற்கு தடை விதித்திருக்கிறது. நீதிபதிகள் இறுதி முடிவெடுக்க காத்திருக்கிறார்கள். மேலும் இது குறித்து திரைத்துறை சார்ந்த யாரும் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை பதிவு செய்து பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று அமீர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்