முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படம் விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.29 - நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் விவகாரம் தேசிய ஒறுமைப்பாடு, சட்டம் ஒழுங்கை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், படப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என நடிகர் கமலஹாசனுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் தேசத்தின் ஒற்றுமை, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று கருத்து தெரிவித்த நீதிபதி கே.வெங்கட்ராமன் வழக்கு விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைத்தார்.

நடிகர் கமலஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூப படத்தை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இப்படத்தை  வெளியிட தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியவில்லை.

இந்த நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமலஹாசன் சகோதரர் சந்திரஹாசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் நீதிபதி கே.வெங்கடராமன் விசாரித்து வருகிறார். 

கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தடையை நீக்குவதற்கு அரசு தரப்பிலும், சில முஸ்லிம் அமைப்புகள் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த படத்தை பார்க்க விரும்புவதாக நீதிபதி கே.வெங்கடராமன் உத்தரவிட்டார். கடந்த சனிக்கிழமை அன்று நீதிபதிக்கு விஸ்வரூபம் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அரசு தரப்பு வக்கீல்கள், முஸ்லிம் அமைப்பு வக்கீல்கள் படத்தை பார்த்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கமலஹாசன் தரப்பில் மூத்த வக்கீல்கள் சதீஸ்பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த 144 தடை உத்தரவை எதிர்த்து தனியாக மனுதாக்கல் செய்கிறோம் என்று தெரிவித்தனர். அப்பொழுது நீதிபதி நடிகர் கமலஹாசன் சென்னையில் இருப்பதாக தெரிகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

இந்த படத்திற்கு செய்யப்பட்டுள்ள முதலீட்டை கவனத்தில் கொண்டாலும் அதே நேரத்தில் தேசத்தின் ஒற்றுமை மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம். எனவே வழக்கு விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைக்கிறேன் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக செய்தியாளர்கள் மற்றும் தொலைகாட்சி நிருபர்கள் கோர்ட் வளாகத்தில் பெருமளவில் குவிந்தனர். உயர்நீதிமன்றத்தை சுற்றிலும் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்