முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம்: நீதிபதியின் இடைகால உத்தரவு ரத்து

புதன்கிழமை, 30 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.31 -  நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு தடை விதித்துள்ளது. இஸ்லாமியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், விஸ்வரூபம் படத்துக்கான தமிழக அரசின் தடையை நீக்கி, நேற்று  முன்தினம் இரவு 10 மணிக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச்சில் இன்று (நேற்று) காலை மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நீதிபதி கே.வெங்கட்ராமன் இந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.நவதகிருஷ்ணன் தலைமையிலான வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவின் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்குச் சென்று முறையிட்டனர். அவர்களிடம் பேசிய நீதிபதி, நாளை  (நேற்று) காலை 10.30 மணிக்கு முதல் பெஞ்சில் இது தொடர்பாக முறையிடுமாறும், இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிப்பதாகவும் கூறினார்.

இதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள எலிபி தர்மாராவ் தலைமையிலான முதல் பெஞ்ச்சில் இதற்கான மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அது பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்ளபடும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி பிற்பகலில் விசாரணை தொடங்கியது. 

அரசு வக்கீல் நவதகிருஷ்ணன் வாதாடும் போது, விஸ்வரூபம் படத்தை திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே தொடர்ந்து தடை விதிக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தற்போது வேண்டும் என்றே விஸ்வரூபம் படத்திற்கு எதிராக வன்முறை தூண்டப்படுகிறது. எனவே தடையை நிரந்தரமாக ரத்து செய்து தகுந்த பாதுகாப்புடன் படத்தை திரையிட உத்தர விட வேண்டும் என்று வாதாடினார். 

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், எலிபி தர்மராவ் மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்ததாவது:-

தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தனி நீதிபதி முன்பு வரும் திங்கட் கிழமை 4 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வரும் புதன் கிழமை 6 ஆம் தேதிக்குள் முடித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.    

உயர் நீதிமன்ற தடையால் விஸ்வரூபம் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்