முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கவே படத்துக்குத் தடை: முதல்வர்

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, பிப்.1 - விஸ்வரூபம் பட பிரச்சினையில் எந்த ஒரு அரசியலும் இல்லை. முழுக்க முழுக்க இது தமிழகத்தின் சட்டம்,ஒழுங்கு பிரச்சனை தொடர்பானதுதான். இந்த படம் வெளிவர வேண்டுமென்றால் இஸ்லாமிய அமைப்புகளும், கமல்ஹாசனும் அமர்ந்து பேசி சுமூகமான தீர்வை  ஏற்படுத்திட வேண்டும் என்றும், இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை  தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-  

இந்த பிரச்சினையை கருணாநிதி உள்ளிட்ட சில அரசியல் கட்சியினரும் மீடியாக்களும் பெரிதுப்படுத்தி என் மீதும், அரசின் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாக வும் முதலமைச்சர் தெரிவித்தார். கமல்ஹாசனுடன் ஒரு காலத்திலும் தமக்கு தனிப்பட்ட விரோதமோ கருத்து வேறுபாடோ ஏற்பட்டதில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெளிவுப்படுத்தினார்.

விஸ்வரூபம் பட பிரச்சினை தொடர்பாக பல்வேறு கட்சியினரும் மீடியாக்களும் இதன் உண்மை நிலை என்ன என்பது குறித்து முழுமையாக தெரியாமலேயே என் மீதும், அரசாங்கத்தின் மீதும் பல்வேறு விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பலரும் பல்வேறு விதமான கோணங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு மாநிலத்தின் அமைதி, சட்டம், ஒழுங்கு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதை எதையோ பேசி வருகின்றனர்.இந்த மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் என்னுடைய முதல் கடமை சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதும், மக்களிடம் அமைதியை ஏற்படுத்துவதும்தான்.

அன்றாட வேலைகளுக்குச் செல்லும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதுதான் என்னுடைய முதல் நோக்கம். சட்டம் ஒழுங்கை காவல் துறையினரை வைத்துதான் பராமரிக்க முடியும்.விஸ்வரூபம் படம்  வெளியிடப் பட்டால் முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை வரும். ஒரு சில இடங்களில் வன்முறை உருவாகும் என்ற தகவல் அரசுக்கு கிடைத்தது.

தமிழகம் முழுவதும் 524 சினிமா தியேட்டர்கள் உள்ளன. அனைத்து தியேட்டர்களிலும் பாதுகாப்பு அளிப்பது என்பது இயலாத காரியம். இந்த படத்திற்கு தடை விதிக்க  வேண்டும் என 24 முஸ்லிம் அமைப்புகள் உள்துறை செயலரை சந்தித்து  வலியுறுத்தினர். அதை மீறி திரைப்படத்தை வெளியிட்டால் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெறும். வன்முறையும் சில இடங்களில் நடக்கும் என உளவுத் துறையும் தெரிவித்து இருந்தது.

தமிழகத்தில் உள்ள மொத்த காவல் துறையினரே சுமார் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர்தான்.  இவர்களில் சிறப்பு போலீஸ் படை, போக்குவரத்து துறை, சைபர் கிரைம், ரோந்து பணி என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவையெல்லாம் போக பந்தோபஸ்து பணிகளுக்கென்று சுமார் 9200 காவலர்கள்தான் உள்ளனர். 524 தியேட்டர்களில் இவர்களை வைத்துக்கொண்டு எப்படி பாதுகாப்பு தர முடியும். 

ஒரு தியேட்டருக்கு 20 போலீசார் வீதும் 3 ஷிப்டுகளில் பணியாற்ற 60 போலீஸ்காரர்கள் தேவை. இது தவிர ரோந்து பணி சென்சிடிவ்வான பகுதிகளுக்கு என்று காவலர்களை நியமித்தால் அந்த வகையில் பந்தோபஸ்துக்கு மட்டுமே 56,440 போலீசார் தேவைப்படும். எப்படி இந்த அரசால் அதை செய்ய முடியும். எப்படி சட்டம், ஒழுங்கை பராமரிக்க முடியும். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

படம் வெளிவந்து வன்முறையும் கலவரமும் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு. அப்படி ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே ஒரு அரசின் கடமை அல்லவா. ஒரு பகுதியில் ஒரு அரசியல் கட்சியால் பிரச்சினை உருவாகும் என்று தெரிந்தால் அந்த மாவட்ட நிர்வாகமே, அதாவது கலெக்டர் மூலம் குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியின் தலைவர் அந்த மாவட்டத்திற்குள் நுழைவதற்கு தடை விதித்து அமைதியான சூழலை ஏற்படுத்துவார். ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட நிலை உருவாகும் என்றால் அதை தடுப்பது  அரசின் கடமை. அதைத்தான் இந்த அரசு செய்துள்ளது. அதைத் தவிர இந்த திரைப்படத்தை தடை விதித்ததில் தனிப்பட்ட விரோதம் இல்லை.

எனக்கு எந்தவித தனிப்பட்ட பகை உணர்வு கிடையாது. மேலும் கூறுகிறேன், இந்த விஸ்வரூபம் தடை பிரச்சினையில் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.

அரசியல் ஆதாயத்திற்காகவும் நான் இந்த தடையை விதிக்கவில்லை. கருணாநிதியின் குடும்பத்தினர் பலர் சினிமா படம் எடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆதாயம் கருதி அவர்களின் படம் எதையும் நான் தடை செய்து இருக்கிறேனா? அப்படியிருக்கையில் கமல்ஹாசன் படத்தை மட்டும் நான் எப்படி தடை செய்வேன். எனக்கு கமலுடன் எந்தவித முன்விரோதமும் இல்லை. இந்த தடையில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.

இது குறித்து வெளிவரும் தகவல்களும் விமர்சனங்களும் அனைத்தும் முழுக்க முழுக்க தவறானவை. மாநில அரசுக்கு ஒரு படத்தை தடைவிதிக்க அதிகாரம் இல்லை என்றும் சிலர் பேசுகிறார்கள். தமிழ்நாடு சினிமா சட்டம் 1955, செக்ஷன் 7-ன்படி ஒரு திரைப்படத்தை தடை செய்வதற்கு மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. இந்த அடிப்படையில் டேம் 999 படத்தை மாநில அரசு தடை செய்ததை உச்சநீதிமன்றமே அனுமதித்துள்ளது.

அந்த வகையில் சட்டபடிதான் இந்த திரைப்படத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. கமல்ஹாசன் எந்த வழியிலும் எனக்கு விரோதமானவர் இல்லை. இந்த படத்தை முழுமையாக தடை செய்யும் அதிகாரம் இருந்தும் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு சுமார் 58 வயதாகி இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு மெகா பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கு எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். இதன் மூலம் அவருக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறுகிறார். இதற்கு அரசு எப்படி பொறுப்பு ஏற்க முடியும்.

நான் பல ஆண்டுகளாக திரைப்படமே பார்ப்பதில்லை. நான் முதலமைச்சரான பிறகு திரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் பலர் என்னை படம் பார்க்க அழைத்தபோதெல்லாம் அதில் எனக்கு விருப்பமில்லை என்று மறுத்துள்ளேன். அதனால் அவர்களும் அழைப்பதில்லை. அந்த அடிப்படையில்தான் விஸ்வரூபம் படத்தையும் நான் பார்க்கவில்லை.

இந்த படத்தை முஸ்லிம் அமைப்பினர் பார்த்து இது வெளிவந்தால் பிரச்சினை ஆகும். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று  24 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் தலைமைச் செயலரிடம் மனு அளித்தனர்.  அவர் உள்துறை செயலாளருக்கு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் அவர்கள் உள்துறை செயலரையும் சந்தித்து தடைகோரி உள்ளனர். ஜனவரி 25-ம் தேதி விஸ்வரூபம் படம் திரையிடப்படும் என்று அறிவுத்த நிலையில் 21-ம் தேதி முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு திரைப்படத்தை காட்டி உள்ளனர்.  22-ந் தேதி படம் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகள் மீண்டும் உள்துறை செயலரை சந்தித்து தடையை வலியுறுத்தி உள்ளனர். 

இதைத் தொடர்ந்து 23-ம் தேதி அரசுத்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது படம் வெளிவந்தால் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்துவார்கள். இதன் மூலம் வன்முறை, கலவரங்கள் ஏற்படும் என்பதால் அதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ஒரு சில தியேட்டர்களில் படம் வெளியானபோதே ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று சில இடங்களில் தடியடியும் நடைபெற்றுள்ளது.  

இந்த நிலையில் படத்தை வெளியிட அனுமதித்திருந்தால் போராட்டங்கள் நடைபெற்று இருக்கும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் கருணாநிதியும் மற்றவர்களும் அடக்குமுறையை ஏவிவிட்டதாக குற்றம் சாட்ட மாட்டார்களா? அதனால்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பதற்கும் வன்முறையை தடுப்பதற்கும் வேறு வழியின்றி அந்ததந்த மாவட்ட கலெக்டர் மூலம் 144 தடை உத்தரவு 15 நாட்களுக்கு மட்டுமே அனுமதித்திருந்தது. ஆரம்பத்தில் ஒரு காட்சியை கூட கட் செய்ய முடியாது என்று கமல்ஹாசன் கூறிவந்தார். அரசு தடை விதித்ததும் அவர் அரசை அணுகி அதன் மூலம் முஸ்லிம் பிரமுகர்களுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருக்க வேண்டும். ஆனால் அதனை விடுத்து உடனடியாக நீதிமன்றத்தை அணுகி விட்டார். அதன் பிறகு அரசு என்ன செய்ய முடியும். இங்கு மட்டுமல்ல சிங்கப்ர், அரபு நாடுகளிலும் இலங்கையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. மைசூரில் திரையரங்கத்திலேயே தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதைபற்றியெல்லாம் யோசிக்காமல் இங்கு மட்டுமே மீடியாக்களும் அரசியல் கட்சியினரும் விமர்சனம் செய்கிறார்கள்.  

நடிகர் கமல்ஹாசன் முன்பு எந்த காட்சியையும் வெட்ட மாட்டேன் என்று கூறிவந்தவர் நேற்று சில காட்சிகளை நீக்குவதற்கு சம்மதம் என தெரிவித்து இருக்கிறார். முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதனை ஏற்று ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்கள்.

ஒரு மாநில முதலமைச்சர் என்ற வகையில் நான் தெரிவித்துக்கொள்வது முஸ்லிம் தலைவர்களடன் கமல்ஹாசன் அமர்ந்து பேசி ஒரு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் அரசைப் பொறுத்தவரை அதற்கு தேவையான ஒத்துழைப்பை நல்கும். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்