பொட்டுசுரேஷ் கொலைவழக்கு: அட்டாக்பாண்டி வேலூரில் சரண்?

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

மதுரை, பிப், - 5 - மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மற்றொரு வலதுகரமான அட்டாக் பாண்டி இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மு.க. அழகிரியின் வலதுகரமாகவும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ், கடந்த 31-ந் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த அனைவரும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து கொலையின் பின்னணி பற்றி விசாரிக்க இருக்கின்றனர். இந்நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியாக திமுக பிரமுகரும் மு.க. அழகிரியின் மற்றொரு ஆதரவாளருமான அட்டாக் பாண்டியை போலீசார் சந்தேகிக்கின்றனர். அட்டாக் பாண்டி தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கடந்த சில மாதங்களாகவே தலைமறைவாக இருந்து வருகிறார். அவர்கள் எங்கே தலைமறைவாகி இருக்கின்றனர் என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. தற்போது அட்டாக் பாண்டி இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மதுரை போலீசார் அங்கு விரைந்திருக்கின்றனர். அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 7 பேரும் இதேபோல் மதுரை மேலூர் நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக கூறி போக்குகாட்டிவிட்டு திண்டுக்கல் அருகே நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனால் அட்டாக் பாண்டியும் அப்படி போக்கு காட்டுகிறாரோ என்ற சந்தேகமும் மதுரை போலீசாரிடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: