உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நாளை பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.6:​-சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக  (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள ஆர்.கே. அகர்வால் பிப்ரவரி 7-ம் தேதி (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொள்கிறார்.  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் தலைமை நீதிபதி அகர்வாலுக்கு  ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து  காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற  வளாகத்தில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.  சென்னை உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த  எம். ஒய். இக்பால், அண்மையில் பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற  நீதிபதியாக  நியமிக்கப்பட்டார். அதன்பின் நீதிபதி  எலிபி தர்மாராவ் உயர் நீதிமன்றத்தின்  தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார்.  இந்நிலையில், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் ஆர்.கே. அகர்வால் சென்னை உயர்நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக (பொறுப்பு) கடந்த  வாரம் நியமிக்கப்பட்டார். புதிய தலைமை நீதிபதி  வியாழக்கிழமை  பதவியேற்கிறார். இதனைத் தொடர்ந்து  சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49 ஆக உயர்கிறது.  வாழ்க்கைக் குறிப்பு :  கடந்த 5.5.1953 - ல் பிறந்த ராஜேஷ் குமார் அகர்வால் (ஆர்.கே. அகர்வால்), உத்தரப் பிரதேச  மாநிலத்தின் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் ஸ்ரீ ராஜா ராம் அகர்வாலின் மகன் ஆவார். அலாகாபாத் சட்டப் பல்கலைக்கழகத்தில்  சட்டப் படிப்பை முடித்த இவர், 14.8.1976 அன்று தன்னை வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். அரசியமைப்புச் சட்டம், கம்பெனி சட்டம், கல்வி மற்றும் வரி விதிப்பு சட்டங்கள் முதலானவற்றில்  நிபுணத்துவம் பெற்றவர். 5.2. 1999 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின்  நீதிபதியாகப் பொறுப்பேற்றார். தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் 4.5.2015 ​- ல் பதவி ஓய்வு  பெறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: