முக்கிய செய்திகள்

அரசு கொள்கையில் தலையிட கோர்ட்டுக்கு அதிகாரமில்லை

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      இந்தியா
SupremeCourt

 

புதுடெல்லி, ஏப்.21 - அரசு முடிவுகள் சட்டப்பூர்வமானதா இல்லையா?என்பதை மட்டும் கோர்ட்டுகள் தீர்மானிக்கலாம். ஆனால் அரசு கொள்கையில் தலையிட கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கருத்து கூறியுள்ளது.கல்வி கொள்கை தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க இமாச்சல் பிரதேச அரசு ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தது. 

இந்த தீர்மானத்தை எதிர்த்து இமாச்சல பிரதேச ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இமாச்சல பிரதேச அரசின் அந்த முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது. 

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இமாச்சல பிரதேச அரசு மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் விசாரணை நடத்தி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்தது.

 வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு சுதந்திரம் உள்ளது. அதில் கோர்ட்டுகள் தலையிட முடியாது. அரசின் கருத்துக்கு கோர்ட்டுகள் பதில் கருத்து சொல்ல முடியாது. கொள்கை விஷயங்களில் அரசு முடிவுகளில் கோர்ட்டுகள்தலையிட அதிகாரமில்லை.

அரசின் முடிவை பரிசீலிக்கும் மேல் முறையீட்டு அமைப்பாக மட்டுமே கோர்ட்டுகள் செயல்பட முடியும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அரசாங்கத்தின் கொள்கை முடிவில் ஐகோர்ட்டு தலையிடுவது சரியானதாக இருக்காது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: