முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம் ``விஸ்வரூபம்''

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை,பிப்.-9 ​- நாயகன் கமல் இந்திய உளவுதுறையை சேர்ந்தவர். தன்னுடைய இளம் மனைவி பூஜா குமாருடன் அமெரிக்கா செல்கிறார். அங்கே அய்யர் இனத்தை சேர்ந்த இளம் பெண்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார். பூஜா மருத்துவ ஆராய்ச்சி படிக்கிறார். பூஜாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் காதல் ஏற்படுகிறது. இது ஒரு பக்கமிருக்க கமலுக்கு மற்ற பெண்களுடன் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதை கண்டறிய ஒரு ஆங்கிலேய நபரை நியமிக்கிறார். பூஜை அந்த நபர் கமல்  எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்கிறார். அப்போது கமல் திடீரென முஸ்லீம் வேடமிட்டு இருக்கும் ஒரு காட்சியை பூஜா காதலன் கண்டுபிடிக்க அதை பூஜாவிடம் சொல்லிவிடுகிறார். இதனால் பூஜா - கமல் இடையே இந்து, முஸ்லீம் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் பூஜாவின் காதலரும் முஸ்லீம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன் என்பது தெரிகிறது. 

இந்நிலையில் காஸ்மீர் தீவிரவாதிகள் பிடியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கமல், பூஜா மற்றும் பூஜாவின் காதலன் சலீம் சிக்கி கொள்கிறார்கள். அப்போது தீவிரவாதி காஷ்மீர் போலீஸ் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகள் சலீமை சுட்டுத்தள்ளுகிறார்கள். தீவிரவாதிகளுக்கு தலைமையாக இருக்கும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதி உமர் குருஸ்க்கு கமல், பூஜாவை என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.  காஷ்மீர் தீவிரவாதிகள் கமலை சுடவேண்டாம், முட்டிக்கு கீழே சுடு, அவன் உயிருடன் வேண்டும் என்று தீவிரவாதிகளுக்கு உத்தரவு போடுகிறார் உமர். அப்போது நான் தொழுகை செய்ய வேண்டும் என் கைகட்டை கொஞ்சம் அவிழ்த்து விடுங்க என்று தீவிரவாதிகளிடம் கெஞ்சுகிறார். கமல்  கைகட்டை அவிழ்த்து விடுகிறார்கள். உடனே தீவிரவாதிகளை தாக்கிவிட்டு பூஜாவை அழைத்து கொண்டு தீவிரவாதிகள் பிடியிலிருந்து கமல் தப்பிக்கிறார். பிறகுதான் தாலிபான் தீவிரவாதியாக மாறியது ஏன், தீவிரவாதிகளுடன் பயிற்சி எடுத்து,  அதன் மூலம்  ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை அழித்தது எப்படி என்பதை தனது மனைவி பூஜாகுமாரிடம் பிளாஸ்பேக் காட்சிகளாக விவரிக்கிறார் கமல்.

தொடக்க காட்சியில் பரதநாட்டிய மாஸ்டராக வரும் கமல். பெண்மை கலந்த தோற்றத்தில் நளினமாக நடந்து வரும்போது நடிப்பில் அசத்திவிடுகிறார். அடுத்த பரதம் கற்கும் அய்யர்வீட்டு பெண்களுக்கு சிக்கன் கறி கொடுப்பது தியேட்டரை கலகலக்க வைக்கிறது. விஸ்வநாத் என்ற பெயரை வைசம் அகமத்காஷ்மீரி என்று மாற்றிக் கொண்டு அதற்கேற்ப தீவிரவாதியா தோற்றத்தை அமைத்துக் கொண்டு மிரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தீவிரவாதிகளின் தலைவன் உமர் குப்பல் நுழைந்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுடன் மோதும் காட்சிகள் சூப்பர்.

கமலை பார்த்து அப்பா இல்லாம வளர்ந்த பசங்க விவரமாக இருப்பாங்க, உன்னமாதிரி என்று உமர் சொல்கிறார். உடனே அப்பா யார் என்றே தெரியாமல வளர்ந்த பசங்க அதைவிட விவரமா இருப்பாங்க, உன்ன மாதிரி என்று உமரை பார்த்து கமல் பேசும்போது கைதட்டல் பறக்கிறது.

அதைபோல உன்னை கடவுள்தான் காப்பாத்தனும் என்று மனைவி பூஜாகுமார் கூறும்போது எந்த கடவுள் என்று கமல் கேட்பது மூன்று கடவுள்களும் முகம் சுழிக்கும் கேள்வி. இப்படி படம் முழுக்க ரசிக்க கூடிய வசனங்கள் ஏராளம். படத்துக்கு மிகப்பெரிய பலம் தமிழ் நடிகர்களில் நாசரை தவிர மற்ற நடிகர்கள் இல்லாதது. நாயகி பூஜாகுமார் இளமை துள்ளலோடு அய்யர் ஆத்து பெண்ணாக கலக்கி இருக்கிறார். அவ்வப்போது கணவரை சந்தேகப்படும் காட்சி, கமலுக்கு காயம் ஏற்படும்போது முதல் உதவி செய்யும் ஆண்ட்ரியாவிடம் பூஜா காட்டும் முறைப்பு அருமை. இதே போல நாசர், ராகுல் போஸ், சேகர் கபூர், அப்துல் திவாரி, ஹயத் ஆசீப் என படத்தில் நடித்திருக்கு அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

சானுஜான் வர்க்கீஸ் ஒளிப்பதிவு காட்சிகளை பளிச்சிட வைக்கிறது. அமெரிக்கா, லண்டன், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் என அனைத்தும் புதுமை. மகேஷ் நாராயணன் எடிட்டிங் விறு விறுப்பை தருகிறது. சங்கர் சொன்லாய் இசையில் பாடல் மற்றும் பின்னணி அருமை. பாடல்கள் வைரமுத்து, கமல்ஹாசன், தயாரிப்பு சந்திரஹாசன், கமல்ஹாசன் இணை தயாரிப்பு பி.வி.பி.சண்முகம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கமல்ஹாசன். மனதில் பட்டதை சமூக கண்ணோட்டத்துடன் துளியும் பயமின்றி படத்தை இயக்கியிருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனை மனதார பாராட்டலாம். படம் வெளிவருவதற்கு முன்பே விஸ்வரூபம் எடுத்தவர்களை புஷ்வானமாக்கியிருக்கும் நிஜரூபம் விஸ்வரூபம். க்லைமாக்சில் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரும் என்று கிளு கிளுப்பான காட்சியை ரசிகர்களுக்கு காட்டி கலகலப்பாக முடித்திருக்கிறார் கமல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்