சினிமா கலைஞர்களுக்கு மூவர் விருது

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.12 - சிறந்த சினிமா கலைஞர்களுக்கு ராஜ் டி.வி. சார்பாக மூவர் விருது வழங்க உள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-

திரையுலகில் அறிமுகமாகும் புதுமுகங்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு விருது வழங்கி ஆண்டுதோறும் கவுரவப்படுத்தி வருகிறது ராஜ் டி.வி. அந்த வகையில் 2013-ம் ஆண்டிற்கான சிறந்த புதுமுக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நகைச்சுவை நடிகர்கள் ஆகியோரை தேர்ந்து எடுக்க உள்ளது. இந்த தேர்வை சினிமா ரசிகர்கள் இரண்டு லட்சம் பேர் தேர்வு செய்ய உள்ளனர். 

அதற்காக தமிழ்நாடு முழுக்க வாக்கு எடுப்பு பிரச்சார வேன் ராஜ் டி.வி. சார்பாக செல்ல உள்ளது. இந்த வாகனத்தில் வாக்குச் சீட்டு, வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும். வாக்குச் சீட்டில் புதுமுக நடிகர்கள் ஏழு பேர், இயக்குனர்கள் ஏழு பேர் வீதம் சினிமா கலைஞர்கள் இடம் பெற்றிருப்பார்கள். ரசிகர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவருக்கு தேர்வு குழுவினர் தேர்வு செய்யும் நபர் ஒத்துப்போனால் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும். 

விருதுக்குரிய அறிமுக கலைஞர்களை தேர்வு செய்யும் நடுவர் குழுத் தலைவராக இயக்குனர் கே.பாக்கியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். நடுவர் குழுவில் இயக்குனர்கள் பார்த்திபன், தம்பி ராமையா, சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கதிரேசன், கமீலா நாசர் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். 

வருகிற 23-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் முதல் மூவர் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஏராளமான திரைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: