முக்கிய செய்திகள்

சாய்பாபா உடல்நிலை மேலும் கவலைக்கிடம்

sathya-sai-baba

 

புட்டபர்த்தி,ஏப்.22 - ஆந்திர மாநில மக்களால் புட்டபர்த்தி சாய்பாபா என்று அன்போடு அழைக்கப்படும் சாய்பாபாவின் உடல் நிலை நேற்று மேலும் மோசமடைந்தது. அவரது உடல் உறுப்புக்கள் சிகிச்சைக்கு ஏற்றதாக இல்லை என்று அவரை கவனித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஏ.என். சபையா கூறுகையில், 

சாய்பாபாவுக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவரது கல்லீரல் செயல்படவில்லை என்றும் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகவும் இது தங்களுக்கு பெரும் கவலையளிப்பதாகவும் டாக்டர் சபையா தெரிவித்தார். புட்டபர்த்தி சாய்பாபாவின் உடல் நிலை தொடர்ந்து மோசமானதை அடுத்து ஆந்திராவில் புட்டபர்த்தி நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியை நோக்கி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் புட்டபர்த்தியில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இந்த படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடி வரும் சாய்பாபாவுக்கு தற்போது வயது 86. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்காவில் இருந்து சில டாக்டர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐதராபாத்தில் நேற்று அம்மாநில வருவாய் துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், சாய்பாபா உடல்நிலை மோசமடைந்திருப்பதை சுட்டிக் காட்டினார். அவரது உடலின் பல்வேறு உறுப்புக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில உறுப்புக்கள் செயலிழந்து விட்டதாகவும் ரகுவீர ரெட்டி தெரிவித்தார். இருந்தாலும் டாக்டர்கள் பாபாவை காப்பாற்ற முயற்சிகள் செய்து வருவதாகவும் கூறிய அவர், கடவுளை பிரார்த்திப்போம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் ஆந்திராவில் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த உயர்மட்ட கூட்டத்தில் சாய்பாபா குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு வேளை ஏதேனும் நடந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: