ராமலிங்கத்தின் முன் ஜாமீன் மனு 18-ம் தேதி வரை நீட்டிப்பு

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

தாராபுரம், பிப்.14 -  தாராபுரத்தை அடுத்த உப்புத்துறை பாளையத்தை சேர்ந்தவர்  கடலை வியாபாரி ராமலிங்கம் (46).  இவர்  ராமநாதபுரம் மாவட்டம்   தொண்டியில்  கச்சா  எண்ணை  சுத்திகரிப்பு  ஆலை அமைக்க அனுமதி கேட்டு  மத்திய அரசுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதனால்  அவர் மீது  மத்திய அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இதனையடுத்து  உப்புத்துறை  பாளைத்தில்  உள்ள ராமலிங்கம்  வீட்டில் டிசம்பர் மாதம் 31- ம்  தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

அப்போது  அவரது வீட்டில் இருந்து ரூ.27,500 கோடி  மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  மேலும் அமெரிக்க கடன்  பத்திரம் தொடர்பாக ராமலிங்கத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதற்கிடையே ராமலிங்கத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடன் பத்திரங்கள் போலியானது  என்று மத்திய அரசு அறிவித்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலிங்கம்   போலீஸார் தன்னை   கைது செய்யாமல் இருக்க சென்னை  ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். அவருடைய   முன்ஜாமீன் கடந்த 11  - ம்  தேதியுடன் நிறைவடைந்தது. எனவே முன்ஜாமீன் தேதியை நீட்டிப்பு செய்யக்கோரி ராமலிங்கம் சார்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல்  செய்யப்பட்டது.  அந்த மனுவை பரிசீலனை செய்த  சென்னை  ஐகோர்ட் ராமலிங்கத்தின் முன் ஜாமீன்  தேதியை வரும் 18ம் தேதி வரை நீட்டிப்பு  செய்து   உத்தரவிட்டது. 

இந்நிலையில் கடந்த 11ம் தேதி  வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ராமலிங்கத்திற்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக ராமலிங்கம், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை.  இதற்கிடையே தனது   வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை அள்ளிச்சென்றதாக வருமானவரித்துறை அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல் வழக்கு  தொடர முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: