காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - பணியின்போது அகால மரணமடைந்த இரண்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 3 காவலர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர காவல், அரசு ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்வராஜ் உடல்நலக்  குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 8.2.2013 அன்று  உயிரிழந்தார் என்ற  செய்தியையும்;

தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டம், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவில்  சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த  பா.ரவிச்சந்திரன் 9.2.2103 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கண்ணன்  உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  11.2.2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த செல்வராஜ்  10.2.2013 மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

விருதுநகர் மாவட்டம், மல்லி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த  ஆ.ரமேஷ்  உடல் நலக் குறைவால் 11.2.2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன் மற்றும் கண்ணன், தலைமைக் காவலர்   செல்வராஜ், முதல் நிலைக் காவலர்  ரமேஷ் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் நலக்குறைவால் காலமான காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ்,  கண்ணன் முதல் நிலைக் காவலர் ரமேஷ், மாரடைப்பால் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன்  மற்றும் தலைமைக் காவலர்  செல்வராஜ் ஆகியோர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா  மூன்று லட்சம்  ரூபாய்  வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: