அவதூறு வழக்கு: விஜயகாந்த் ஆஜராக உத்தரவு

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தே.மு.த.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26.10.2012 அக்டோபர் 26 ஆம் தேதி கேப்டன் டி.வி.யில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேட்டி ஒளிபரப்பானது. அதில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து விஜயகாந்த் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜெகன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன், ஏப்ரல் 4 ஆம் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதே போல 2012ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பேட்டி ஒளிபரப்பானது. அதில், தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்த பணிகள் நடை பெறுவதற்கு 12 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என்று கூறி இருந்தார்.

இதையடுத்து இளங்கோவன் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தல் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கை அரசு வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன், ஏப்ரல் 25 ஆம் தேதி இளங்கோவன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: