முக்கிய செய்திகள்

இந்தியா-துபாய் இணைந்து செயல்பட கலாம் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      இந்தியா
Dr abdulkalam

 

துபாய்,ஏப்.22 -  எரிசக்தி துறையில் இந்தியாவும், துபாயும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார். துபாயில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கலாம் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சுக்களை கல்ப் நியூஸ் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கலாம் கூறியிருப்பதாவது, 

எரிசக்தி துறையில் ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் அமல்படுத்துதல் பிரிவில் இவ்விரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடுகளை சமாளிக்க முடியும். அதே சமயத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிசக்தி துறையில் இந்த இரு நாடுகளும் ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் வர்த்தக பிரிவில் முதலீடு செய்ய வேண்டும். இத்துறையில் அரசு தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச  அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். 

இந்தியா, துபாயை சேர்ந்த நிறுவனங்கள் மற்ற ஐக்கிய அரசு நாடுகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இத்துறையில் இணைந்து செயல்பட முன்வர வேண்டும். இதற்கு இளம் தொழில் நுட்ப வல்லுநர்களை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இவ்விரு நாடுகளும் எரிசக்தி துறையில் சுதந்திரமான நிலையை அடைய முடியும். இந்தியாவும், துபாயும் முதல் கட்டமாக இத்துறையில் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும். இதற்காக இரு நாடுகளும் தலா ரூ. 450 கோடி ஒதுக்கலாம். இவ்வாறு செய்யும் பட்சத்தில் தனியார் நிறுவனங்கள் இத்துறையில் பங்கு கொள்ள ஆர்வம் காட்டுவார்கள் என்று கலாம் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: