முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்தியரசு: முதல்வர் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, பிப்.16 - மத்தியில் தமிழர்களின் வலுவான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் மத்திய அரசை உருவாக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பி.ஜே.பி.காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 65 ஜோடிகளுக்கு மங்கலநாணை அளித்து திருமணத்தை நடத்திவைத்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை வாழ்த்தி பேசியதாவது:-

மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை நான் வகித்து வருகிறேன்.  நான் சந்திக்காத சோதனைகளா? நான் அனுபவிக்காத துன்பங்களா? நான் எதிர்கொள்ளாத இன்னல்களா? மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிற்குத் தேவையான மண்ணெண்ணெயைக் கூட, மத்திய அரசு தர மறுக்கிறது. மின்சாரத்தைத் தர மறுக்கிறது. மத்திய நிதி உதவி மறுக்கப்படுகிறது அல்லது தாமதப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.க்கான டிஜிட்டல் அனுமதியை தரக்கூட மத்திய அரசு மறுக்கிறது. காவேரி நதிநீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்டக் கூட உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவு பெற வேண்டிய நிலை தான் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டு இருக்கிறது.  மக்களுக்கு மின்சாரம் வழங்கத் தேவையான கம்பி வடத்தினை காட்டுப் பகுதிக்குள் எடுத்துச் செல்லத் தேவையான அனுமதியை தர மத்திய அரசு மறுத்ததால், உச்ச நீதிமன்றம் சென்று, ஆணைப் பெற்று அதன் பின்னர் தான் மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடக்கூட மத்திய அரசுக்கு மனமில்லை. காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்குமே கர்நாடகாவில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.  ஆனால், தமிழகத்தில் இந்த இரண்டு தேசிய கட்சிகளுக்குமே செல்வாக்கு இல்லை. இங்கே தலைகீழாக நின்றாலும், காங்கிரசாலும், பி.ஜே.பி.யாலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் இந்த இரண்டு கட்சிகளுமே கர்நாடகாவிற்கு சாதகமாகத் தான் நடந்து கொள்கின்றன. இதில் உள்ள வேதனை என்னவென்றால் தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று கபட நாடகமாடி ஆட்சி அதிகாரத்தை தமிழ்நாட்டில் அனுபவித்து, மத்தியில் இன்னமும் அதை அனுபவித்துக் கொண்டிருக்கிற சுயநல பேர்வழி, இவற்றிற்கெல்லாம் மத்திய அரசுக்கு பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருக்கிறார் என்பது தான். 

இவற்றையெல்லாம் மீறி, மத்திய அரசு தரும் நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து; எதிரிகளின் தடைகளை தவிடுபொடியாக்கி; தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி நாம் சாதனை படைத்து வருகிறோம். இந்திய வரலாற்றிலே இதுவரை இல்லாத அளவுக்கு, வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு பயிரிழப்புக்காக ஏக்கர் ஒன்றுக்கு, 15,000 ரூபாய் வழங்கி இருக்கிறோம். இதனை எதிர்க்கட்சிகளே பாராட்டியுள்ளன. கடந்த 20 மாதங்களில் தமிழக மக்களின் நலன்களுக்காக வியத்தகு சாதனைகளை படைத்திருக்கிறோம். பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நம் தமிழக அரசு விளங்கி வருகிறது. நமது திட்டங்களை முன் மாதிரியாக பல மாநிலங்கள் கடைபிடித்து வருகின்றன. 

காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தர கூட கர்நாடகம் மறுத்தது. மத்திய அரசு மவுனம் சாதித்தது. பின்னர் நாம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டோம். தொடர்ந்து போராடினோம். ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என்று சொன்ன கர்நாடகாவிடமிருந்து 66 டி.எம்.சி. அடி தண்ணீரை நாம் போராடி பெற்று இருக்கிறோம். காவேரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டி இருக்கிறோம். 

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு மவுனம் சாதித்தது. சுயநலம் காரணமாக அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. அரசும், இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மத்திய அரசை பல முறை வற்புறுத்தினேன். எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுக்க நான் உத்தரவிட்டேன்.  இதன் விளைவு, 20.2.2013​க்குள் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.  இது நம்முடைய மன உறுதிக்கு, விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி. 

மன உறுதி என்றவுடன், எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. 

அமெரிக்காவில், ஒரு தேவாலயத்தில், பாதிரியார் ஒருவர் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி, நீண்ட உரையாற்றினார்.  அந்த உரை முடிந்தவுடன், யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்.  அனைவரும் கையை உயர்த்தினர்.  ஆனால் ஒரு சிறுவன் மட்டும் உயர்த்தவில்லை. 

உடனே அந்தப் பாதிரியார், அந்தச் சிறுவனிடம்,  சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? உனக்கு நரகம் செல்லத் தான் விருப்பமா? என்று கேட்டார்.  

அதற்கு அந்த சிறுவன், நான் சொர்க்கத்தையும் விரும்பவில்லை, நரகத்தையும் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன் என்றான். 

உடனே அந்தப் பாதிரியார், அந்தச் சிறுவனைப் பார்த்து, இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா? என்று கேட்டார். 

அதற்கு அந்தச் சிறுவன், இங்கே கருப்பு இன மக்களை நாயை விட கொடுமையாக நடத்துகின்றனர்.  அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதியானால் தான் முடியும் என்று அமைதியாக கூறினான்.  

அந்தச் சிறுவன் தான், பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கன்.  

சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் அவர்களைப் போன்று, நீங்கள் மன உறுதியுடன், ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். 

 வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் என்பது போல், தனி மனிதன் உயர்ந்தால், வீடு உயரும்; வீடு உயர்ந்தால், ஊர் உயரும்; ஊர் உயர்ந்தால், தமிழ்நாடு உயரும்; தமிழ்நாடு உயர்ந்தால், பாரத தேசம் உயரும் என்பதை மனதில் வைத்து, இல்லற வாழ்க்கையில் இன்று அடியெடுத்து வைத்துள்ள மணமக்களாகிய நீங்கள் அன்புடனும், அதே சமயத்தில் குறிக்கோளுடனும் செயல்பட வேண்டும். அந்தக் குறிக்கோள் உங்கள் இல்லத்துடன் நிற்காமல், மாநிலம் முழுவதும் விரிந்து பரவ வேண்டும். 

தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கவும்; காவேரி டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறாமல் செழிப்புடன் இருக்கவும்; தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும்; நான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டுமென்றால், மத்தியில் நமது குரல், தமிழர்களின் வலுவான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கக் கூடிய, நாம் சொன்னால் கேட்கக் கூடிய, மத்திய அரசை உருவாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், நாளை நமதே நாற்பதும் நமதே என்ற இலக்கினை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன், வருகின்ற மக்களவைத் தேர்தலில் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் களப் பணியாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொண்டு, 

கலையாத கல்வி, குறையாத வயது, கபடில்லா நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, பிணியில்லா உடல், சலிப்பில்லா மனம், அன்பான வாழ்க்கைத் துணை, தவறாத மக்கட்பேறு, குறையாத புகழ், வார்த்தை தவறாத நேர்மை, தடைகள் வாரா கொடை, தொலையாத செல்வம், கோணாத கோல், துன்பம் இல்லாத வாழ்க்கை, இறைவனின் அருள், ஆகிய பதினாறு செல்வங்களையும் பெற்று; அன்பினால் அரவணைத்துப், பண்பினால் பரவசப்படுத்தி, மன உறுதியுடன் சவால்களை எதிர்கொண்டு, இணை பிரியாமல் இன்பம் எய்தி, பெற்றோர், சுற்றத்தார் நலம் காத்து, வாழ்க என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்