முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்யும் நல்ல காரியம் என்றாவது நன்மையை தரும்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.16 - பிரதிபலனை எதிர்பாராமல் நாம் செய்யும் நல்ல  காரியம் என்றாவது ஒரு நாள் நமக்கு நன்மையை தரும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று (15.2.2013) சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற கழகக் குடும்பங்களின் திருமண விழா மற்றும் கழகப் பேரவை சார்பில் நடைபெற்ற 65 ஜோடிகளுக்கான திருமண விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை வருமாறு:-

மங்கலம் பொங்கும் மகிழ்ச்சிகரமான இந்த நன்னாளில் மூன்று கழகக் குடும்பங்களின் திருமணங்களையும்; எனது பெயரில் செயல்பட்டு வரும் ஜெயலலிதா பேரவையின் சார்பில் 65 ஜோடி மணமக்களுக்கான திருமணங்களையும் தலைமையேற்று நடத்தி வைக்கின்ற உன்னத வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி, நான் உள்ளபடியே உவகை அடைகிறேன்.  இந்த இனிய நாளில் கழகம் எனும் குடும்ப உறுப்பினர்களாகிய உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

இன்றைய தினம், முதலாவதாக ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும்,  பொதுப் பணித்துறை அமைச்சருமான அன்புச் சகோதரர் கே.வி.ராமலிங்கம் - அம்மணி தம்பதியினரின் மகள் திருவளர்செல்வி ஆர். ஆர்த்தி பிரியதர்ஷினிக்கும்; பி.கே. நடராஜன் - பாலாமணி தம்பதியினரின் மகன் திருவளர்செல்வன் என். சிவக்குமாருக்கும்  திருமணம் இனிதே நடந்தேறியுள்ளது.  கழகம் எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில், கழகப் பணிகளை தீவிரமாக ஆற்றி வந்த ஆற்றல் மிகுந்த செயல் வீரர் அன்புச் சகோதரர்  மு.ஏ. ராமலிங்கம்.  அவரது இல்லத் திருமணத்தை இன்று நடத்தி வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்ததாக,  முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர்,  ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் ​ தெய்வத்திரு ஆர்.கே. நளாயினி அம்மாள் தம்பதியினரின் மகன் திருவளர்செல்வன் ஆர்.கே. திவாகருக்கும்; வி.எம். புகழேந்திரன் - தேவி புகழேந்திரன் தம்பதியினரின் மகள் திருவளர்செல்வி காயத்ரிக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.

தொடர்ச்சியாக, ஆவடி நகரக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர், ஆர்.சி. தீனதயாளன் ​ - சசிகலா தீனதயாளன் தம்பதியினரின் மகன் திருவளர்செல்வன்  கமல் என்கிற கோவிந்தராஜுலுவுக்கும்;  ஜெ. ராதாகிருஷ்ணன் ​- தீர்த்தரமணி ராதாகிருஷ்ணன் தம்பதியினரின் மகள் திருவளர்செல்வி ஆர். சரண்யாவுக்கும் திருமணம் சிறப்புற நடைபெற்று இருக்கிறது. 

மிகச் சிறப்பான முறையில் கழகப் பணி ஆற்றி வரும் இந்த 3 கழக உடன்பிறப்புகளின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்ததில் நான் உள்ளபடியே எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இதனைத் தொடர்ந்து, எனது பெயரில் செயல்பட்டு வரும் ஜெயலலிதா பேரவையின் சார்பில் 65 ஜோடி திருமணங்கள் இனிதே நடந்தேறியுள்ளன.  

எனது பிறந்த நாளினை முன்னிட்டு, சாதி மத பேதமின்றி, ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு திருமணங்கள் செய்து வைக்கும் மகத்தான பணியை கழகப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு 65 ஜோடி மணமக்களுக்கான திருமணங்களை இந்தப் பேரவை நடத்தியிருக்கிறது இந்த புனிதப் பணியை சிறப்பாக மேற்கொண்டு வரும் பேரவைக்கு எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன். 

இல்லற வாழ்க்கையில் இன்று அடியெடுத்து வைத்துள்ள மணமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். 

பழிப்புக்கு இடமில்லாத வாழ்க்கையை இல்லறம் என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இல்வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், அன்பும், அறமும், அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. அப்பொழுது தான் வாழ்க்கை இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும்  நிறைந்ததாக இருக்கும்.  

ஓர் ஏழைச் சிறுவன் வீடு வீடாக சென்று துணிகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கல்வி பயின்று வந்தான்.  ஒரு நாள் அவனுக்கு கடும் பசி.  அவன் கையில் ஐம்பது காசு மட்டுமே இருந்தது.  இந்தக் காசை வைத்து எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.  

யார்?  என்று கேட்டவாறே, ஒரு இளம் பெண் கதவைத் திறந்து அந்தச் சிறுவனைப் பார்த்து  என்ன வேண்டும்? என்று கேட்டாள்.

அந்தப் பெண்ணிடம் சாப்பாடு கேட்க மனமில்லாத அந்தச் சிறுவன், குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டான். 

அந்தச் சிறுவனை ஏற, இறங்கப் பார்த்த அந்தப் பெண், அவன் கடும் பசியில் இருப்பதை உணர்ந்தாள். பின்னர், ஒரு டம்ளர் பாலை கொண்டு வந்து அந்தச் சிறுவனிடம் கொடுத்தாள். 

அந்தப் பாலை குடித்து முடித்த சிறுவன், நான் எவ்வளவு காசு கொடுக்க வேண்டும்? என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான். 

அதற்கு அந்தப் பெண்,  எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு ஒரு பொருளை அன்பாகக் கொடுக்கும் போது காசு வாங்கக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்று கனிவுடன் கூறினாள். 

அதற்கு அந்தச் சிறுவன், என் அடி மனதிலிருந்து தங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினான். 

ஆண்டுகள் பல கடந்தன.  

அழகாக இருந்த அந்த இளம் பெண் திடீரென நோய்வாய்பட்டாள்.  அந்த ஊரில் அவளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண்ணை அனுமதித்தனர். புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்டார். 

அந்த மருத்துவர், அந்தப் பெண்ணின் விவரங்களையும் அந்தப் பெண்ணுக்கு வந்துள்ள நோயினையும் படித்து தெரிந்து கொண்டார். உடனடியாக தன்னுடைய அறைக்குச் சென்று விட்டார். அந்தப் பெண்ணுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர் அந்தப் பெண் குணமடைந்தாள். மருத்துவ சிகிச்சைக்கான பில்லை கொண்டு வரும்படி மருத்துவமனையின் கணக்கரிடம் மருத்துவர் தெரிவித்தார். அவ்வாறே பில்லும் வந்தது.  அந்த பில்லில் எதையோ எழுதி, பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பிவிட்டார் மருத்துவர். 

அந்த பில்லின் உறையைப் பார்த்ததுமே அந்தப் பெண்ணுக்கு நடுக்கம் வந்துவிட்டது. மருத்துவச் செலவு எவ்வளவு இருக்குமோ என்ற பயத்துடன் உரையை பிரித்தாள் அந்தப் பெண். 

அந்த பில்லில், ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்தப் பில்லுக்கு முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது என்று எழுதப்பட்டிருந்தது. இது வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு ஆகும். 

இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது, அன்பின் சக்தியை, அன்பின் வலிமையை என்பதை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பினை, மணமக்களாகிய நீங்கள் உங்கள் மனைவியிடம், உங்கள் கணவரிடம், உங்கள் பெற்றோர்களிடம், உங்கள் உற்றார் உறவினர்களிடம் செலுத்தினால், உங்கள் வாழ்வில் நிச்சயம் அமைதியும், ஆனந்தமும் நிலவும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

இது மட்டுமல்ல. எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நாம் செய்கிற நல்ல காரியம், என்றாவது ஒரு நாள் நமக்கு நன்மையைத் தரும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல், அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்.  

 அன்பு செலுத்துவதால், துன்பம் வராது என்று சொல்ல முடியாது. இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் அந்த துன்பங்களை எதிர்கொள்ளக் கூடிய, மன வலிமை; சவால்களை சமாளிக்கக் கூடிய மன உறுதி உங்களிடம் இருக்க வேண்டும்.  

மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் என்றார் மகாகவி பாரதி. 

மன உறுதி உடையவர்களால் தான் நினைத்ததை நினைத்தபடி அடைய முடிகிறது. மன உறுதியுடையவர்கள் துன்பத்தில் துவள்வதில்லை; மன உறுதி உடையவர்களால் தான் பிறருக்கு உதவ முடிகிறது. மன உறுதி இல்லாதவர்களை உலகம் ஒதுக்கிவிடுகிறது.  இதனை மனதில் பதிய வைத்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் மேற்கொண்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago