முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல்: அரசியலாக்க வேண்டாமாம்: குர்ஷித்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 17 - ஹெலிகாப்டர் முறைகேட்டில் பிரணாப் முகர்ஜியின் பெயர் அடிபடுவதை அடுத்து இந்த சர்ச்சையை அரசியலாக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய நலன் சார்ந்த இந்த விவகாரத்தை அரசியலாக்குவது சரியானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். ஹெலிகாப்டர் வாங்குவதற்கு முன்பாக அனைத்து நடைமுறைகளையும் மத்திய அரசு உறுதியுடன் பின்பற்றியதாக சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் பிரணாப் முகர்ஜி ராணுவ மந்திரியாக இருந்த போது செய்யப்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரணாப்முகர்ஜி கையெழுத்து போட்டிருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள குர்ஷித், இந்திய ஜனாதிபதியாக உள்ள பிரணாப் பதவிக்குரிய மாண்பினை எதிர்கட்சிக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இத்தலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான அரசின் முயற்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள குர்ஷித், 

விளக்கம் கேட்டு தொடர்புடைய நிறுவனத்திற்கு அரசு கடிதம் எழுதியுள்ளது என்றும் உரிய பதில் கிடைக்கும் வரை சற்று பொறுமை காட்ட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசு அமைதி காத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார். முறைகேடு ஏதும் நடைபெற்றதா என்பது குறித்த தகவல்களைப் பெற அரசு முன்பே முயற்சி எடுத்ததாக கூறிய குர்ஷித், எனினும் அதில் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது இருந்ததாக தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த ஊழல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அல்லது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் சி.பி.ஐ. யை நம்ப முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை என்ற கோரிக்கையை பரிசீலிக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பான உண்மைகளை கண்டுபிடிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பதில் அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதில் மத்திய அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சல்மான் குர்ஷித்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்