முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை திரும்பப் பெற முடியாது

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

சென்னை, பிப். 17 - பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பனபகா லெட்சுமி கூறியுள்ளார். மேலும் எண்ணெய் நிறுவனங்கள் விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

மத்தியில் ஆளும் மன்மோகன்சிங் அரசு பதவியேற்ற நாள் முதல் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திக் கொண்டே வந்தது. பிறகு நாளடைவில் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்யும் உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்து விட்டது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது போல் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையையும் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்டது. தாரை வார்த்து கொடுப்பதில் காங்கிரஸ் அரசு கைதேர்ந்த அரசு போலும். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 1.50 வீதமும், டீசல் லிட்டருக்கு 45 பைசா வீதமும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் இரவே அமலுக்கு வந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் 2 வது முறையாக இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அத்தனை தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இது நடுத்தர மக்களை வஞ்சிக்கும் செயல் என்று குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளார். இதே போல் அனைத்து தலைவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பனபகா லெட்சுமி நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்தான் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. மேலும் எண்ணெய் நிறுவனங்கள் விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்றும் கூறி கைவிரித்தார் பனபகா லெட்சுமி. சிலிண்டர் போன்ற பொருட்களுக்கு கோடிக்கணக்கில் மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆக, விலை உயர்வை திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. 

ஆனால் பாதிக்கப்பட்டது என்னவோ, நடுத்தர மக்கள்தான். 

இந்த நிலையில் திருச்சியில் நேற்று பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான எச். ராஜா பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்யும் உரிமை விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்