மே.வங்கத் தேர்ததிலும் பணப்புழக்கம் - காரத்

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      இந்தியா
Karat

 

கொல்கத்தா,ஏப்.22 - மேற்கு வங்கத்திலும் கறுப்பு பணம் விளையாடுகிறது. எனவே தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போல தேர்தல் கமிஷன் மேற்கு வங்கத்திலும் எடுக்க வேண்டும் என்று இ. கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தேர்தல் கமிஷனை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இவற்றில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இங்கு தேர்தல் நடந்த போது கடுமையான வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. ரூ. 50 கோடி வரை ரொக்கப் பணமும், ரூ. 20 கோடி மதிப்புள்ள பொருட்களும் தமிழகத்தில் நடந்த வாகன சோதனையில் பிடிபட்டன. ஆனால் பிடிபட்ட பணத்திற்கு யாருமே உரிமை கோரவில்லை என்று சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பெருமளவில் தவிர்க்கப்பட்டது. கள்ள ஒட்டுக்களும் தவிர்க்கப்பட்டன. 

இந்த நிலையில் மேற்கு வங்கத்திலும் தற்போது சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. அங்கும் கறுப்பு பணம் விளையாடுவதாக பிரகாஷ் காரத் கூறுகிறார். இது குறித்து இ. கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளரான பிரகாஷ் காரத், கொல்கத்தாவில் நேற்று கூறியதாவது, 

மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டவிரோதமான கறுப்புப் பணம் விளையாடுகிறது. நடந்து வரும் சட்டமன்ற தேர்தலில் பணப்புழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதை தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கறுப்பு பணம் புழங்குவதை தடுக்க வேண்டும். சாலைகள் அனைத்திலும் செக்போஸ்டுகள் அமைக்க வேண்டும். ஒருவேளை பணம் பிடிபட்டால் அவற்றை வருமான வரித்துறையில் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இப்படி செய்ததால் தான் 50 கோடி ரூபாய் ரொக்கமும், ரூ. 20 கோடி மதிப்புள்ள பொருளும் பிடிபட்டுள்ளன. தேர்தல் ஆணையம் அதே நடவடிக்கையை இங்கும் செய்ய வேண்டும். பணத்திற்கு எல்லையே இல்லை. ஆகவே, மேற்கு வங்கத்தில் தக்க நடவடிக்கை எடுத்து பணப்புழக்கத்தை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார். 

இந்த நிலையில் கூக்லியில் துணை தேர்தல் கமிஷனர் வினோத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் இருந்து ரூ. ஒரு கோடி கறுப்பு பணம் பிடிபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வருமான வரி அதிகாரிகளின் உதவியோடு இந்த பணம் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: