முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குக்கு இடைக்கால தடை

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 19 - சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்தது. மறு உத்தரவு வரும் வரை அவர்களை தூக்கிலிடக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் வீரப்பன் கூட்டாளிகளுக்கு தற்காலிகமாக நிம்மதி கிடைத்துள்ளது. 

சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக இருந்த அவரது மூத்த சகோதரர் ஞானப்பிரகாசம் மற்றும் சைமன், மீசை மாத்தையா, பிலவேந்திரன் ஆகியோர் 1993 ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பாலாறு அருகே கண்ணிவெடி தாக்குதல்கள் நடத்தினர். இந்த சம்பவத்தில் 22 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டார்கள். இது தொடர்பாக மைசூர் தடா நீதிமன்றம் மேற்கண்ட நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 

இதை எதிர்த்து நால்வரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் நால்வருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக உயர்த்தி 2004 ல் தீர்ப்பு வழங்கியது. 

இதையடுத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதிக்கு வீரப்பன் கூட்டாளிகள் நால்வரும் கருணை மனு தாக்கல் செய்தனர். அந்த கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 12 ம் தேதி நிராகரித்தார். இதனால் நால்வரின் தூக்கு தண்டனை உறுதியான நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி வீரப்பன் கூட்டாளிகள் சார்பில் கடந்த சனிக்கிழமை ரிட் மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால் அந்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் மறுத்தார். மனுதாரர் குறிப்பிடும் நான்கு பேரும் உடனடியாக தூக்கிலிடப்படுவார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டிய முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கமான நடைமுறையில்தான் இந்த மனுவை கோர்ட் விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்து விட்டார். 

முன்னதாக சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கோலிங் கொன்சல்வேய்ஸ் சுப்ரீம் கோர்ட் பதிவாளரின் வீட்டுக்கே சனிக்கிழமை மாலையில் சென்று ரிட் மனுவை தாக்கல் செய்தார். அவர் அந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் எடுத்துச் சென்றார். அந்த மனுவை படித்த தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், உடனடியாக விசாரிக்க மறுத்து வழக்கமான நடைமுறையில் இந்த மனு விசாரிக்கப்படும் என்றார். அதன்படி நேற்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் ஆர். தவே மற்றும் விக்ரமாஜித்சென் ஆகியோரடங்கிய பெஞ்ச் வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் மேலும் கூறுகையில், 

தூக்கு தண்டனை தொடர்பான மேல்முறையீடு மனுக்களை குற்றம் சாட்டப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்ய வேண்டும். எனவே திருத்தம் செய்யப்பட்ட விரிவான மேல்முறையீடு மனுக்களை புதன் கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை அவர்களை தூக்கிலிடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரிட் மனு நாளை(புதன் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் அறிவித்தது. இதனால் வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கும் தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்