முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல் பற்றி அரசு விவாதிக்கத் தயார்!

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 19 - நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் இத்தாலிய ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.  இத்தாலியின் பின்மெக்கானிக்கா மற்றும் அகஸ்டா வெஸ்டா நிறுவனத்திடமிருந்து நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்காக ரூ. 3600 கோடியில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இந்தியாவின் இந்த ஆர்டரைப் பெறுவதற்காக ரூ. 360 கோடி லஞ்சப் பணம் கொடுத்திருக்கிறது பின்மெக்கானிக்கா. இந்த லஞ்சப் பணத்தை பெற்றது யார்? யார்? என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த இத்தாலிய ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரும் பிரச்சினையை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்தாலிய ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழலும் ஒளிவு மறைவும் இல்லை. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். கடந்த பல நாட்களாக வெடித்துக் கொண்டிருக்கும் இத்தாலிய ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் மன்மோகன்சிங் தற்போதுதான் முதல் முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பாரதீய ஜனதா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதாவது, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த வேண்டும் என்று அரசு விரும்பினால் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாகவும், காவி பயங்கரவாதம் பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாகவும் எங்கள் கட்சியின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று பா.ஜ.க எச்சரித்திருந்தது. 

இக்கட்சித் தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி இதுபற்றி கூறுகையில், 

ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அல்லது சிறப்பு விசாரணைக் குழு மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள், நிர்வாகிகள் ஆகியோர் இந்து தீவிரவாதம் என்று பேசி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்றத்தை முடக்குவோம். இது அரசின் முடிவை பொறுத்தது என்று ஜோஷி எச்சரித்திருந்தார். 

இந்த எச்சரிக்கைக்கு பயந்து போன மத்திய அரசு தற்போது விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் இது பற்றி கூறுகையில், எல்லா பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. இதில் மறைக்க ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார். உட்கார்ந்து பேசுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்