முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல்-சித்திரை திருவிழா - திக்கு முக்காடிப்போன மதுரை

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.22 - மதுரையில் கடந்த 2 மாதமாக தேர்தல் திருவிழா, சித்திரை திருவிழாவால் மக்கள் திக்குமுக்காடி போய்விட்டனர். ஒரு புறம் பணம் ஆறாக ஓடவும், மறுபுறம் பக்தர்கள் வெள்ளமென திரண்டதையும் காண முடிந்தது.

  தமிழகத்தில் மதுரை என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அரசியல் நிகழ்வுகள் என்றாலும் சரி. கோவில் விழாக்கள் என்றாலும் சரி மதுரைக்கு நிகர் மதுரை தான். தீபாவளி, ஆயுதபூஜை, பொங்கல் போன்ற பண்டிகைகள் கூட மதுரை மாவட்டத்தில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே மதுரை நகருக்குள் மக்கள்கடல் புகுந்து விடும். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளிக்கும். இதே போல் பொங்கல் மற்ற ஊர்களில் ஓரிரு நாட்கள் கொண்டாடப்படுகிறது என்றால் மதுரை மாவட்டத்தில் ஒருமாதம் வரை கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் பண்டிகை வந்ததுமே ஜல்லிக்க்கட்டும் வந்துவிடும். அதிலும் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் பொங்கல் பண்டிகையையொட்டிதான் நடைபெறுகிறது. எந்த அரசியல் கட்சியினர் புதிய கட்சி துவங்க வேண்டும் என்றாலும் சரி, அல்லது கட்சியின் மாநாட்டை நடத்த வேண்டுமானாலும் சரி அவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது மதுரையைத்தான்.

     அதே போலத்தான் இந்த பொது தேர்தலிலும் மதுரையே கதாநாயகனாக திகழந்தது. கடந்த மார்ச் 1 ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துமே மதுரை அரசியலில் விறுவிறுப்பு ஏற்பட்டது.  முதலில் யார் யாருடன் கூட்டணி, பின்பு வேட்பாளர்கள் யார், யார், என்று அரசியல் கட்சியினர் ஒருபக்கம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தாலும் மதுரை மக்களும் அதற்கு ஈடாக ஆர்வத்துடன் இருந்தனர். டீக்கடை, சினிமா தியேட்டர் என  எங்கு கூடினாலும் இந்த பேச்சுதான் முதன்மை வகித்தது. ஒரு வழியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரையில் மூன்று நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதே போல் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசி தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

   இது போக  தேமுதிக தலைவர் விஜயகாந்த், காமடி நடிகர் வடிவேலு, மார்க்சிய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத், மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் என தலைவர்கள் பிரச்சாரத்தால் மதுரை அனல் பறந்தது. இது ஒருபுறமிருக்க கட்சிகளின்வேட்பாளர்கள் தினமும் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் தெருத்தெருவாக  சென்று வாக்கு சேகரித்தனர். எந்த தெருவுக்குள் சென்றாலும் அங்கு டிரம்ஸ் சத்தமும், போடுங்கம்மா ஓட்டு என்ற குரலும் கேட்டுக்கொண்டே இருந்தது.  தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் அரசியல் கட்சியினர் நொந்து போக, பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் அதிரடி வாகன சோதனையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 3 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது போக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் இரவு நேரங்களில் ரோந்து சென்று ஆளும் கட்சியினருக்கு சிம்ம சொப்பணமாக விளங்கினார்.

   இவரின் தீவிர நடவடிக்கையால் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அதிகாரிகளே புலம்பி தீர்த்ததோடு மாவட்ட வருவாய் அலுவலரே சஸ்பெண்டு ஆகும் அளவுக்கு தேர்தல் ஆணையம் கராராக நடந்து கொண்டது. இதே போல், மதுரை மாநகர் கமிஷனர் கண்ணப்பன், புறநகர் மாவட்ட எஸ்பி கார்கர் ஆகியோரின் ஒத்துழைப்பும் தேர்தல் அலுவலர் சகாயத்திற்கு பெரும் துணையாக இருந்தது. தேர்தல் நெருங்க, நெருங்க மதுரையில் பணம் ஆறாக ஓடத்தொடங்கியது. ஒரு புறம்  வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, மறு புறம் தனது கட்சிகாரர்களுக்கு பணத்தை வாரி இறைப்பது என ஆளும் கட்சியினர் மதுரையில் ஒரு பண வெள்ளத்தையே உருவாக்கினர். இதற்கு எடுத்துக்காட்டு மதுரை மேற்கு தொகுதியில் அதிக பணம் செவழிக்கப்பட்டதாகவும், மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருவதுதான். எப்படியோ  தமிழக மக்கள் அதிகமாக  எதிர்பார்த்த மதுரை  தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி கடந்த 13 ம்தேதி  அமைதியாக நடந்து  முடிந்தது.

     தேர்தல் திருவிழா ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர்- ப்ரியாவிடை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். தினமும் இரவு நேரங்களில் சாமி வரும்போது மதுரை நகரின்அனைத்து பகுதிகளில் இருந்தும் பெண்கள் மாசிவீதிகளுக்கு வ ந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் மதுரையில் இரவு நேரங்களில் பயங்கர போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயம் முடிந்து, மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த 16 ம் தேதி நடைபெற்றது. இந்த வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசத்தனர். அடுத்த நாள் மீனாட்சி தேரோட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பூப்பல்லக்குடன் மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா முடிவுக்கு வந்தது.

    இதை தொடர்ந்து மதுரை மீனாட்சி  திருக்கல்யாணம் அன்றே மலையில் இருந்து சுந்தர்ராஜபெருமாள் கள்ளழகர் வேடம்  பூண்டு மதுரைக்கு  புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மூன்றுமாவடி, தல்லாகுளத்தில் எதிர்சேவை என அழகர் பக்தர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். இதையடுத்து உலக பிரசித்தி பெற்ற வைபவமான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 18 ம் தேதி நடைபெற்றது. அழகர் புதிய தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை தரிசித்தனர். அழகர் செல்லும் இடமெல்லாம் பின்னலாயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பின்தொடர்நது சென்றனர். எத்தனை முறை அழகரை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டும் அவரின் மகிமைதான் இதற்கு காரணம். இதைதொடர்ந்து வைகை ஆற்றுக்குள் மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம், ராமராயர் மண்டபத்தில் விடிய,விடிய தசாவதாரம் என அழகரே கதாநாயகனாக திகழ்ந்தார். இதை தொடர்ந்து தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அழகர் பூப்பல்லக்கில் மலைநோக்கி புறப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழியனுப்பி வைத்தனர்.

    மதுரை மக்கள் தேர்தல் திருவிழா, சித்திரை திருவிழாவால் திக்குமுக்காடி போய்விட்டனர். தேர்தல் திருவிழாவில் பணவெள்ளத்தாலும்  சித்திரை திருவிழாவில் பக்தர்கள் வெள்ளத்தாலும் திணறிப்போன மதுரை இப்போதுதான் மீண்டு உள்ளது. நேற்று தான் மதுரை மக்கள் தங்கள் சொந்த வேலைகளை பார்க்க தொடங்கி உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தீவிர நடவடிக்கையால் முடங்கிப்போன வியாபாரம் தற்போதுதான் சூடுபிடித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல் பக்தர்களின் கூட்டத்தால் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் நேற்று தான் பெருமூச்சு விட்டபடி நிம்மதியாக சென்றனர். எது எப்படியோ மற்ற மாவட்டத்துகாரர்கள் தேர்தல் திருவிழாவை மட்டும் சந்தித்தனர். ஆனால் மதுரை மக்கள் தேர்தல் திருவிழா, சித்திரை திருவிழா ஆகிய இரண்டையும் வெற்றிகரமாக சந்தித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்