பாக்., துறைமுகத்தை கைவசப்படுத்திய சீனா

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப்.20 - இந்தியாவுக்கு மேலும் எரிச்சலை மூட்டும் வகையில், பாகிஸ்தான் துறைமுகம் ஒன்றை சீனா தனது பொறுப்பில் எடுத்துள்ளது. இதுநாள் வரை இந்த துறைமுகம் சிங்கப்பூர் வசம் இருந்தது. பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகம்தான் தற்போது சீனாவின் வசம் வந்துள்ளது. இங்கு தனது கடற்படைத் தளத்தை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் எரிச்சலும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது. இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் பூமாலைத் திட்டத்தின் கீழ்தான் இந்த துறைமுகத்தை சீனா கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவைச் சுற்றிலும் சீனா தனது நிலைகளைப் பலப்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது சீனா. இதுகுறித்து பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், முறைப்படி கவ்தார் துறைமுகம் சீனாவிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கும், சீன வெளிநாட்டு துறைமுகங்கள் பொறுப்புக் கம்பெனிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். எரிபொருள் மற்றும் வர்த்தக போக்குவரத்திற்காகவே இந்த துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் வாங்கியுள்ளதாக சீனா கூறினாலும் கூட இங்கு அது தனது கடற்படையை நிறுத்தப் போவதாக கூறப்படுகிறது. அதேசமயம், தற்போது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சீனாவுக்கு வரும் எண்ணைய் மற்றும் இதர இறக்குமதிப் பொருட்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சுற்றுப் பாதையில் பயணித்து சீனாவுக்கு வர வேண்டியுள்ளது. ஆனால் கவ்தார் துறைமுகம் மூலம் இது பெருமளவில் மிச்சமாகிறது. இந்த துறைமுகத்தை முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் காலத்திலேயே கேட்டது சீனா. ஆனால் அமெரிக்காவுக்குப் பயந்து அவர் தர மறுத்து விட்டார். ஆனால் தற்போது அமெரிக்காவுடன் பாகிஸ்தானுக்கு உறவு சரியில்லை.மேலும் இந்தியாவுக்கு செக் வைக்கும் வகையில் துறைமுகத்தைத் தூக்கி சீனாவிடம் கொடுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: