தீவிரவாதிகளுக்கு ஆதரவு ? பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      உலகம்
Pak-Ind-Terror

 

புதுடெல்லி, பிப்.22 - தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் ஏராளமான தீவிரவாத முகாம்கள் இருக்கின்றன. இம்முகாம்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிபெற்ற அந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து நாசவேலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அந்நாட்டின் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் தனது மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த துணைபோகிறது. இதுகுறித்து இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கேட்டுக்கொண்டுள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு நேற்று பாராளுமன்றத்தின் இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க முதலில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள  வேண்டும். அப்போதுதான் சுமூகமான அர்த்தமுள்ள தீர்வுகளைக் காணமுடியும் என்றும் அவர் கூறினார். இருநாட்டு பிரச்சனைகளுக்கு சுமூகமான அமைதியான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதையே இந்தியா எப்போதும் விரும்புகிறது. அதன் அடிப்படையில்தான் ஆப்கானிஸ்தானில் மறு கட்டுமான நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்துவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 

துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்  வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டுவருவதற்கான பைப் லைன் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். அண்டை நாடுகளுடன் நல்ல நட்புறவை வைத்துக்கொள்ளவே இந்தியா விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: