பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதா?

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், பிப். 21 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்து ராணுவ முகாமில் வைத்து சித்திரவதை செய்து கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ்ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பல லட்சம் பேர் சிங்களப் படையினரால் அழிக்கப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவரா என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் ஒரு இறந்த உடலைக்காட்டி புகைப்படத்தை வெளியிட்டது. அதையே இலங்கை அரசும் கூறியது. ஆனால் பிரபாகரன் உயிரிழக்கவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்று உலகத் தமிழர்கள் நம்புகிறார்கள். புலிகள் அமைப்புக்கு நெருக்கமான தலைவர்களும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே கூறி வருகிறார்கள். 

இந்த நிலையில் தனது மகன் பாலச்சந்திரனைப் போலவே பிரபாகரனும் ராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்று இப்போது பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதி மதியம் 1 மணிக்கு முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் பிணம் கிடந்ததாகவும், அதை ராணுவம் கண்டு பிடித்ததாகவும் சிங்கள அரசும், ராணுவமும் தெரிவித்தன. ஒரு இறந்த உடலையும் அவர்கள் காட்டினர். முள்ளிவாய்க்கால் பகுதியில் தப்பி ஓட முயன்ற விடுதலைப்புலிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

அப்போது நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகள் சிலருடன் பிரபாகரனும் இறந்ததாகவும், மறுநாள் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. பிரபாகரன் உடல் என்று காட்டப்பட்ட உடலில் தலைப் பகுதியின் பின்பகுதி மிகவும் மோசமாக சேதமடைந்திருந்தது. எலும்புகள் நொறுங்கிப் போயிருந்தன. மிகவும் பயங்கரமான கனரக ஆயுதத்தால் மிக நெருக்கத்தில் வைத்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அப்போது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. எனவே அந்த உடலுக்குரியவர் போரில் இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் உயிருடன் பிடிக்கப்பட்டு கொடூர சித்திரவதைக்குப் பின்னர் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அப்போது கருதப்பட்டது. 

இந்த நிலையில் அந்த உடலுக்குரியவர் உண்மையிலேயே பிரபாகரனாக இருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. அவரை உயிருடன் பிடித்து ராணுவ முகாமில்வைத்து சித்திரவதை செய்து கொடூரமாகக் கொன்றிருக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பிரபாகரன் குடும்பத்தினரை ஒரே முகாமில்அடைத்து வைத்து ஒவ்வொருவராக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சானல் 4 நிறுவனம் இதுகுறித்து ஏதாவது விளக்கத்தை அளிக்க முன்வருமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் தமிழர்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: