அமைதி போராட்டம் நடத்த துணை நிற்போம்: கேமரூன்

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

அமிர்தசரஸ், பிப். 22 - உலகம் முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதற்கான உரிமைக்கு பிரிட்டிஷ் அரசு துணை நிற்கும் என்று அந்நாட்டு பிரதமர் கேமரூன் தெரிவித்தார்.  மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், 1919 ம் ஆண்டு ஜாலியான் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்ட மைதானத்துக்கு வருகை புரிந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மண்டியிட்டு கைகூப்பி அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்குள்ள ஜோதியின் முன் நின்றவாறு தலைவணங்கி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அங்கிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் ஜாலியன் வாலாபாக் படுகொலை மிகவும் வெட்கக் கேடான செயல் என குறிப்பிட்டார். பின்னர் அவர் கூறும் போது, 

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. இங்கு நடைபெற்ற சம்பவத்தை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். பிரிட்டிஷ் வரலாற்றில் இது மிகவும் வெட்கக் கேடான ஒரு செயல். உலகம் முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதற்கான உரிமைக்கு பிரிட்டிஷ் அரசு துணை நிற்கும் என்றார். 

1997 ம் ஆண்டு ராணி எலிசபெத்தின் ஜாலியன் வாலாபாக் வருகைக்குப் பிறகு 16 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இங்கு வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அமிர்தசரசில் உள்ள ஸ்ரீகுருராம் தாஸ்ஜி விமான நிலையத்தில் கேமரூனை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு கேமரூன் அழைத்து செல்லப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: