ஐதராபாத் குண்டு வெடிப்பு: ஐ.நா. - அமெரிக்கா கண்டனம்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப். 23 - ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலன்ட் கூறுகையில், 

ஐதராபாத்தில் நடந்துள்ள கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். இதில் தேவைப்படுமானால் அனைத்து உதவிகளை இந்தியாவுக்கும் அளிக்க அமெரிக்கா தயாராகவுள்ளது என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை சந்திக்க இருக்கிறார். அப்போது தமது ஆழ்ந்த இரங்கலை கெர்ரி, ரஞ்சன் மாத்தாயிடம் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. 

இதேபோல் ஐதராபாத் சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பொது மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான இத்தாக்குதல் கண்டனத்துக்குரியது. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: