முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை டெஸ்ட்: 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப்.23 - சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணியோ துவக்கத்தில் ரன்களைக் குவிக்க முடியாமல் தடுமாறியது.முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. 

     இந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.  இந்தப்போட்டிக்காக 11 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி 2 தினங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

ஹென்ரிக் டெஸ்டில் அறிமுகம் ஆனார். 11 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து சுழற்பந்து வீரர் ஒஜா நீக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்டிலும் விளையாடிய அவர் ஹர்பஜன்சிங்குக்காக கழற்றிவிடப்பட்டார். ஹர்பஜன்சிங்குக்கு 100​வது டெஸ்ட் ஆகும். வேகப்பந்து வீரர்களில் இஷாந்த்சர்மா, புதுமுக வீரர் புவனேஸ்வர்குமார் இடம் பெற்றனர். தொடக்க வீரராக தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் தேர்வானார்.

சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் துவங்கியது.

நேற்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கோவனும் வார்னரும் களமிறங்கினர். இருவரும் மிக நிதானமாக ரன்கள் எடுத்து வந்தனர். ஆஸ்திரேலிய அணி 64 ரன்களை எடுத்திருந்த நிலையில் கோவன் ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் களத்தில் இருந்த வார்னருடன் ஹியூஸ் கை கோர்த்தார். ஆனால் ஹியூஸ் சிறிது நேரம் கூட நிற்கவில்லை. அந்த அணி 72 ரன்களை எட்டிய நிலையில் அஸ்வின் பந்து அவுட் ஆனார். 15 பந்துகளை சந்தித்த ஹியூஸ் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். களத்தில் தொடர்ந்து நின்ற வார்னருடன் வாட்சன் இணைந்தார். இருவரும் இணைந்து 50 ரன்கள் வரை சேர்த்தனர். 34.4 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 126 ரன்களை எடுத்திருந்த நிலையில் வாட்சன் அவுட் ஆனார். வாட்சனைத் தொடர்ந்து கேப்டன் கிளார்க் களத்துக்கு வந்தார். கிளார்க்கும் வார்னரும் இணைந்து கூடுதலாக 5 ரன்களை எடுத்த நிலையில் வார்னர் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மொத்தம் 93 பந்துகளை சந்தித்து 59 ரன்களை சேர்த்திருந்தார். இதைத் தொடர்ந்து கிளார்க்குடன் வேட் கை கோர்த்தார். அவர் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. 35 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்து அவுட் ஆனார். 47 வது ஓவரில் ஆஸ்திரேலியா அணியால் 153 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இவர்கள் அனைவரின் விக்கெட்களையும் அஸ்வின் சாய்த்தார். ஸ்டார்க் 3 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார் .

 47​வது ஓவரின் போது அஸ்வின் 18 ஓவர்களை வீசி 42 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஹர்பஜன்சிங் உட்பட மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை.

 95 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அப்போது ஆஸ்திரேலிய அணியில் கிளர்க் சதம் அடித்தார். அவர் 169 பந்துகள் எதிர்கொண்டு 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிட்டில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இரு அணி வீரர்கள் வருமாறு:​

இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், முரளி விஜய், புஜாரா, தெண்டுல்கர், வீராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஹர்பஜன்சிங், புவனேஸ்வர்குமார், இஷாந்த்சர்மா.

ஆஸ்திரேலியா: கிளார்க் (கேப்டன்), வார்னர், எட்கோவன், ஹியூக்ஸ், வாட்சன், வாடே, ஹென் ரிக்ஸ், பீட்டர் சிடில், மைக்கேல் ஸ்டார்க், பேட்டின்சன், நாதன் லயன்.

நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), எராமஸ் (தென் ஆப்பிரிக்கா). டெவிலிசன் நடுவர்: குல்கானி (இந்தியா). மேட்ச் நடுவர்: பிராட் (இங்கிலாந்து).

ரசிகர்கள் கூட்டம் குறைவு:

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்றைய ஆட்டத்தின்போது இந்தியா​ஆஸ்திரேலியா அணிகள் மோதின.  4 ஆண்டுக்கு பிறகு சென்னையில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்றைய போட்டியை காண ரசிகர்களின் இடையே ஆர்வம் இல்லை. ரசிகர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஸ்டேடியத்தின் பெரும்பாலான கேலரிகள் வெறிச்சோடி கிடந்தது. குறைந்த அளவிலேயே ரசிகர்கள் இருந்தனர். சேம்பாக்க ஸ்டேடியத்தில் 45 ஆயிரம் இருக்கைகள் உள்ளன.

ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதால் ரசிகர்களின் கூட்டம் குறைவாக இருந்ததாக கருதப்படுகிறது. இந்தியா பேட்டிங் செய்யும் போது ரசிகர்கள் திரளாக குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும்(சனி)நாளையும் , (ஞாயிற்றுக் கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்