முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் குண்டுவெடிப்பு: முக்கிய தடயங்கள் சிக்கின

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், பிப். 25 - ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. புலன் விசாரணையை மேலும் துரிதப்படுத்த 15 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று ஆந்திர உள்துறை அமைச்சர் பி. சபீதா இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார். 

இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மாநில தலைமை செயலகத்தில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையில் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சபீதா கூறியதாவது, 

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே இதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம். இது தொடர்பாக விசாரிக்க 15 சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற 10 முதல் 15 போலீசார் இடம் பெற்றுள்ளனர். 

நகரின் முக்கிய இடங்களில் மொத்தம் 1,500 கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. 1995 ம் ஆண்டு முதலே ஐதராபாத் நகரம் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இது போன்ற தாக்குதல் திட்டங்களை முன்னதாகவே கண்டறிந்து முறியடித்துள்ளோம். ஒரு சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன என்றார். 

குண்டுவெடிப்பு நிகழ்ந்த தில்சுக் நகர் பகுதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. அப்பகுதியில் இருந்த வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. போக்குவரத்தும் வழக்கம் போல் இருந்தது. தில்சுக் நகர் பகுதி ஐதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்