மேற்கு வங்க தேர்தலில் கறுப்பு பணம் இ. கம்யூனிஸ்டு குற்றச்சாட்டுக்கு- மம்தா பானர்ஜி மறுப்பு

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
mamta-banerjee 3

 

கொல்கத்தா,ஏப்.- 23 - மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் கறுப்பு பணம் விளையாடுவதாக இ. கம்யூனிஸ்டு கூறிய குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மறுத்துள்ளார்.  மேற்கு வங்கத்தில் மொத்தம் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. முதல் கட்டமாக 54 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்து விட்டது. இன்று 50 தொகுதிகளில் 2 வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் இ. கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஒரு குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதாவது மேற்கு வங்கத்தில் கறுப்பு பணம் விளையாடுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழ்நாட்டைப் போல இங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தேர்தல் கமிஷனை கோரியிருந்தார். இதே குற்றச்சாட்டை முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் கூறியிருந்தார். வாக்காளர்களுக்கு மம்தா கட்சி பணம் கொடுப்பதாகவும், இந்த பணம் எங்கிருந்து வந்தது என்று ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இ. கம்யூனிஸ்டு கட்சியின் இந்த குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். 

இது போன்ற மோசடியான குற்றச்சாட்டுகள் மூலம் வாக்காளர்களை ஏமாற்ற முடியாது என்று அவர் கூறினார். மேற்கு வங்கத்தில் இ. கம்யூனிஸ்டு கட்சி கடந்த பல ஆண்டுகளாக கோடிக்கணக்கில் கொள்ளையடித்து விட்டது என்று கூறிய மம்தா, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் இவர்களது மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கம்யூனிஸ்டு ஆட்சியில் நடந்த கொள்ளைகள் மற்றும் நிதி மோசடிகள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் மம்தா கூறினார். தேர்தலில் கறுப்பு பணம் விளையாடுகிறது என்றும் வாக்காளர்களுக்கு தமது கட்சி பணம் கொடுப்பதாகவும் இ. கம்யூனிஸ்டு கூறிய குற்றச்சாட்டையும் மம்தா பானர்ஜி வன்மையாக மறுத்தார். ஊழலைப் பற்றி பேச இவர்களுக்கு அருகதை இல்லை என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: