முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.26 - பாராளுமன்றத்தில் இன்று 2013-14ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் 100 புதிய ரயில்கள் குறித்த அறிவுப்பும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அன்றைய தினம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அப்போது மத்திய அரசின் திட்டங்களை, கொள்கைகளை அவர் அறிவித்தார். 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு போன்ற பல அறிவுப்புகளை அவர் வெளியிட்டார். இந்த கூட்டத்தொடரில் ஹெலிகாப்டர் பேர ஊழல், பயங்கரவாத தடுப்பு மையம், ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம், பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் பிரபாகரன் மகன் 12 வயது பாலசந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சினை, காவிரி பிரச்சினை போன்றவற்றை அரசியல் கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. காவிரி நடுமன்ற இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் நேற்று தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த கருத்தை பாராளுமன்றத்திலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்துவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள். காரணம், இந்த வாரியத்தை அமைக்க விடமாட்டோம் என்று கர்நாடக பாரதிய ஜனதா கூறி வருகிறது. எனவே இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும். இந்தநிலையில் பாராளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தாக்கல் செய்கிறார். ரயில்வே அமைச்சராக பன்சால் பதவி ஏற்றப்பிறகு அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ரயில்வே அமைச்சர்களாக இருந்த லல்லு பிரசாத், மம்தா பானர்ஜி ஆகியோர் ரயில் கட்டணத்தை உயர்த்தவே இல்லை. ஆனால் அவர்களது பதவிக்காலத்திற்கு பிறகு சமீபத்தில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதாவது கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி ரயில் கட்டணம் 21 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டது. இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டிலும் பயணிகள் கட்டணம் உயர்வு பற்றிய அறிவுப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதன் மூலம் சுமார் ரூ. 6 ஆயிரத்து 600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்திய டீசல் விலை உயர்வால் ரயில்வே துறைக்கு ரூ.3 ஆயிரத்து 300 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து அதை ஈடுகட்ட ரயில் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ரயில்வே அமைச்சர் பன்சால் இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்,நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் திட்டக்குழுவுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இன்று தாக்கலாகும் ரயில்வே பட்ஜெட் 100 புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு,ரயில் உணவு விடுதிகளின் தரத்தை அதிகரித்தல்,ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது மேற்குவங்கத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார். அதேபோல் லல்லு இருந்தபோது பீகாருக்கே முக்கியத்துவம் கொடுத்தார். பன்சால் எப்படி முக்கியத்துவம் கொடுப்பார் என்பதை இன்று தெரிந்து கொள்ளலாம்.  அதேசமயத்தில் லோக்சபை தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால் ரயில் கட்டணத்தை மீண்டும் உயர்த்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. சரக்கு கட்டணமும் சிறிது அளவு உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கு தொழில் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை அமைச்சர் பன்சால் பொருட்படுத்தமாட்டார் என்றும் தெரிகிறது. ரயில்களில் சரக்குகளை அனுப்புவதை அதிகரிக்கும் வகையில் சில சலுகை கட்டணங்களையும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேற்குவங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அரசை காங்கிரஸ் எதிரித்து வந்தாலும் டெல்லியில் இருந்தும் வேறு இடத்திலும் இருந்தும் மேற்குவங்காளத்திற்கு புதிய ரயில்கள் விடலாம் என்றும் தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்