முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,பிப்.26 - நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு நேற்று வலியுறுத்தியது. 

காவிரி பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர்மன்றம் தனது இறுதித்தீர்ப்பை 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகம் ஒருபோதும் அந்த தீர்ப்பை மதித்து தண்ணீர் தரவில்லை. இதையடுத்து நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலிறுத்தி வந்தார். இதுதொடர்பாக பிரதமருக்கு பல முறை கடிதங்கள் எழுதினார். ஆனால் அதனால் எந்த பலனும் கிட்டவில்லை. 

இந்தநிலையில்தான் தமிழகத்தில் சம்பா பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை ஆய்வு செய்த உயர்மட்டக்குழு செய்த பரிந்துரையின் பேரில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். அதேநேரம் நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தாமதம் செய்து வந்த மத்திய அரசை கண்டித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் கடந்த 4-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதாவது நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை பிப்ரவரி 20-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு மத்திய அரசு கெடுவிதித்து உத்தரவிட்டது. இந்த விஷயத்தில் தாமதித்த மத்திய அரசையும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசையும் சுப்ரீம்கோர்ட்டு கடுமையாக கண்டித்தது. சுப்ரீம்கோர்ட்டு கெடு முடிவதற்கு முதல் நாள் அதாவது கடந்த 19-ம் தேதி மத்திய அரசு, கெடுவுக்கு பணிந்து நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. இது தனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, தனது 30 ஆண்டு அரசியல் வாழ்வில் தனது மகத்தான சாதனை என்று முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்தோடு குறிப்பிட்டார். இந்தநிலையில் தமிழ்நாட்டிற்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த 2.44 டி.எம்.சி. அளவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தை எடுத்துரைத்தார். அப்போது கூறிய அவர், நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானதை அடுத்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழகம் சார்பில் வாதாடினார். இதைக்கேட்ட நீதிபதிகள் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும். இந்த இறுதி விசாரணை 6-ம் தேதி முதல் 2 வார காலத்திற்கு நடைபெறக்கூடும். பின்னர் தனது உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு பிறப்பிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்