சென்னை முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 27 - ​​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றியை ஈட்டியுள்ளது. இந்தியா​ ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 380 ரன் குவித்தது. கிளார்க் 130 ரன் எடுத்தார். அஸ்வின் 7 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 572 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் கேப்டன் தோனி 224 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி ஆஸ்திரேலியா அணி இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நேற்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 232 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 75 ரன்னிலும், லயன் 8 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

5​வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 9 ஓவரிலேயே லயன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் முரளி விஜயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முடிவில் ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இது இந்தியாவை விட 49 ரன்கள் கூடுதலானது.

எனவே, 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியாவின் தொடக்க வீரர்களான முரளி விஜய்யும், சேவாக்கும் களமிறங்கினர்.

முரளி விஜய் தன் பங்குக்கு ஒரு சிக்சர் விளாசி 6 ரன்களுடன் வெளியேற, அவரைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் சொதப்பிய சேவாக் 19 ரன்னில் வெளியேறினார். 36 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே இந்திய அணி 2 விக்கெட்டை இழந்தது.

அதைத் தொடர்ந்து புஜாராவும், நட்சத்திர பேட்ஸ்மேன் டெண்டுல்கரும் ஜோடி சேர்ந்தனர். டெண்டுல்கர் களமிறங்கிய முதல் பந்தே சிக்சருக்கு பறந்தது. அதைத்தொடர்ந்து அடுத்த பந்தும் சிக்சருக்கு பறக்க இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 99 சதவீதம் உறுதியானது. கடைசியில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது. டெண்டுல்கர் 13 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆட்டநாயகனாக 224 ரன்கள் எடுத்த தோனி அறிவிக்கப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் என மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில் 1​0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: