வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாரா? இ.கம்யூனிஸ்ட் எம்.பி.யை முற்றுகையிட்ட மக்கள்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
west people

போல்பூர், (மே.வ.) ஏப்.- 23 - மேற்கு வங்க மாநிலத்தில் சைந்தியா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோரிச்சா என்ற பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறி இ.கம்யூனிஸ்ட் எம்.பி. ராமச்சந்திர தோமை அந்த கிராமவாசிகள் சுமார் 3 மணி நேரம் கெரோ செய்தனர். முற்றுகையிடப்பட்ட கம்யூனிஸ்ட் எம்.பி. ராமச்சந்திர தோம் போல்பூர் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரும் சில உள்ளூர் தலைவர்களும் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்றனர். அப்போது வாக்காளர்களை கவருவதற்காக அவர்கள் பணம் கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து அந்த கிராமவாசிகள் அவரை முற்றுகையிட்டு கெரோ செய்தனர். ஒரு வீட்டுக்குள் அவரை அடைத்துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி கேள்விப்பட்டதும் போலீசார் அங்கு விரைந்து அவரை அந்த கிராம மக்களிடம் இருந்து மீட்டனர். ஆனால் அவரிடம் இருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட் எம்.பி. தோம் மறுத்தார். தன்னை களங்கப்படுத்த திரிணாமுல் காங்கிரசார் திட்டமிட்டு சதித்திட்டம் தீட்டிவிட்டார்கள் என்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் தெரிவித்தார். சோரிச்சா பகுதியில் உள்ள எங்கள் கட்சி தலைவர் ஒருவர் வீட்டிற்கு சென்றேன். அப்போது திரிணாமுல் காங்கிரசார் என்று கருதப்படும் சிலர் என்னை அணுகி ஆபாச வார்த்தைகளால் திட்டினர் என்று இ.கம்யூனிஸ்ட் எம்.பி. தோம் வேதனையோடு  தெரிவித்தார். 3 மணி நேரம் ஒரு எம்.பி.யை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: