பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஐதராபாத்தில் இன்று டெஸ்ட்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், மார்ச். 2 - கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய  கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் தோனி இரட்டை சதம், அஸ்வின் விக்கெட் வேட்டை ஆடியது அணிக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் 16 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கு ஆஸி. அணி சிறிது தயக்கம் காட்டியது. பி.சி.சி.ஐ. ஆந்திர மாநில அரசு, மத்திய அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்தது. இதனால் திருப்தியடைந்த ஆஸி. வாரியம் ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முழு மனதுடன் தயாராகி உள்ளது. 

போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் நேற்று முன்தினம் ஐதராபாத் வந்து சேர்ந்துள்ளனர். பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தீவிரவாத தடுப்பு கண்காணிப்பு குழு வீரர்கள் 250 பேர், வீரர்களின் பாதுகாப்புக்கு 250 வீரர்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 270 போலீசார் மற்றும் மைதான பாதுகாப்புக்காக 1100 போலீசார் என சுமார் 2 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர மைதான பகுதிகளில் 60 சுழல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மைதான பகுதியை சுற்றி வெடிகுண்டு சோதனை நிபுணர் குழுக்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: