முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் - புதுவை யில் +2 பொதுத் தேர்வு தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்.2 - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியளவில் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மார்ச் 1-​ந்தேதி அன்று பிளஸ்​2 தேர்வு தொடங்கும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று   தேர்வு  தொடங்கியது

.தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று  தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 8.5 லட்சம் மாணவ​மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

நேற்று துவங்கியுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5,769 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ​ மாணவிகள் எழுதுகிறார்கள்.

இவர்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 பேர் மாணவிகள். அதாவது மாணவர்களை விட 56 ஆயிரத்து 958 மாணவிகள் கூடுதலாக தேர்வில் கலந்துகொள்கிறார்கள். இதற்காக 2020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை மாநகரில் 406 பள்ளிகளில் இருந்து 51 ஆயிரத்து 531 பேர் 140 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 23 ஆயிரத்து 717 பேர். மாணவிகள் 27 ஆயிரத்து 814 பேர் ஆவர். புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 919 மாணவிகள் உள்பட 12 ஆயிரத்து 611 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். பள்ளி மாணவர்களைத்தவிர, தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

தனித்தேர்வர்கள் உட்பட பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் நேற்று தமிழ் முதல் தாள் தேர்வினை எழுதுகின்றனர். தமிழகத்தில் சுமார் 2,050 மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கான சொல்வதை எழுதுபவர் ஆகியோருக்கு தேர்வில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேர்வுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும். மேலும் ஒரு மொழிப்பாடம் கிடையாது.

தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும் முன்னேற்பாடாக ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தேர்வு மையங்களை பார்வையிட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

தேர்வு நேரத்தில் பிட், காப்பி அடிப்பது போன்றவற்றை தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மின் தடையினால் மாணாக்கர் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் தேர்வு நேரத்தின்போது அந்த பள்ளியைச்சேர்ந்த தாளாளர்களோ, ஆசிரியர்களோ, பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது. தேர்வின்போது காப்பி அடித்தல், பிட் அடித்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்தகொள்ளல், விடைத்தாள் மாற்றல் செய்தல், ஆள்மாறாட்டம் செய்வது ஆகிய செயல்பாடுகள் ஒழுங்கீனமாக கருதப்பட்டு, அத்தகை செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமுறைகளின்படி உரிய தண்டனை வழங்கப்படும்.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையம் ரத்துசெய்யவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்