முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனிதஉரிமை தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

ஜெனிவா, மார்ச். - 4 - போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா இன்று தீர்மானம் தாக்கல் செய்யவுள்ளது. கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் ஓட்டெடுப்பின்றி தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா தீவிர முயற்சி செய்துள்ளது.  இலங்கையில் கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள் மீது சிங்கள ராணுவம் குண்டுகளை வீசியதில் ஏராளமானோர் பலியானார்கள். இது போர் நெறிமுறைகளை மீறிய செயல் என்பதால் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து அவரை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேறியது இலங்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. போருக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், போரினால் புலம் பெயர்ந்த மக்களை அவர்களுடைய வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இலங்கை அரசு கூறி வந்த போதிலும் அங்குள்ள தமிழர்களின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. ராணுவத்தின் கண்காணிப்பிலேயே இருப்பதால் அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. போரின் போது தமிழர்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளை ஏற்கனவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 தொலைக்காட்சி சமீபத்தில் போர் இல்லா மண்டலம் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட போர்க்குற்ற ஆவணப் படத்தை வெளியிட்டது. அதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட காட்சி இடம்பெற்று இருந்தது. அதை பார்த்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் 47 நாடுகளை உறுப்பினர்களாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 27 ம் தேதி தொடங்கியது. இதில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. இன்று இந்த தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ளது. தீர்மான விவரம் வெளியாகவில்லை என்ற போதிலும் இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதில் இடம்பெறும் என்று கருதப்படுகிறது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. 

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச தமிழ் அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இன்னும் தனது முடிவை அறிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. இதற்கிடையே ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பின் தீர்மானத்தை கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் ஓட்டெடுப்பின்றி ஒருமனதாக நிறைவேற்ற அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்