முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு தேர்தல்: சங்கங்களுக்கான அறிவிப்பு வெளியானது

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.6 - தமிழ்நாட்டில் 5 கட்டங்களாக நடக்க உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் முதல் நிலையில் உள்ள சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முதல் நிலையில் உள்ள 22 ஆயிரத்து 192 சங்கங்களுக்கான 4 கட்டத்தேர்தல்களுக்கான முறையான தேர்தல்  நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் இதர 14 செயற்பதிவாளர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் இதர செயற்பதிவாளர்களான பால் வளத்துறை ஆணையர், கைத்தறித்துறை இயக்குநர், மீன் வளத்துறை ஆணையர், தொழில் வணிகத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர், சர்க்கரைத்துறை இயக்குநர், பதிவாளர் (வீட்டு வசதி) சமூக நலத்துறை இயக்குநர், கதர் கிராமத் தொழில்துறை ஆணையர், வேளாண்துறை இயக்குநர் ஆகிய 14 செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 22532 கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் சட்டப்படியும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தமிழக அரசு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் ஒன்றை அமைத்தது. இதன் ஆணையராக ம.ரா.மோகன் பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தல் ஆணையம்தான் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்களை தற்போது நடத்த உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த தனியாக மாநில தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதைப் போல கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்களை நடத்த கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இரண்டாம் நிலையில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், செயல்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வகை கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. மூன்றாம் நிலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், (தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஆகியவை தவிர) இதர தலைமை கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. நான்காம் நிலையில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஐந்தாம் நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.

முதல் நிலையில் தேர்தல் நடத்தப்படவுள்ள 22192 சங்கங்களுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதல் கட்டத்தில் 5855 சங்கங்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 5603 சங்கங்களுக்கும், மூன்றாம் கட்டத்தில் 5481 சங்கங்களுக்கும், நான்காம் கட்டத்தில் 5253 சங்கங்களுக்கும் நடத்தப்படவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் 5.4.2013 அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் 12.4.2013 அன்றும், மூன்றாம் கட்ட தேர்தல் 19.4.2013 அன்றும், நான்காம் கட்ட தேர்தல் 27.4.2013 அன்றும் நடைபெறவுள்ளது. 

தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய கூட்டுறவுச் சங்கங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு காவல்துறை மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பதற்கும் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் மோகன் தெரிவித்துள்ளார். தற்போது கூட்டுறவு தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்படும் இந்த தேர்தலுக்கு தேர்தல் பார்வையாளர்கள் எல்லா மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட உள்ளனர். என்றும் அவர் கூறியுள்ளார். முதல் நிலைக்கான தேர்தல் நடைமுறைகள் 4.3.2013 தேதி தொடங்கி  முடிகிறது.

முதல் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் 4 கட்டங்களாக நடக்க உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

முதல் நிலையில் உள்ள 4 கட்டத் தேர்தல்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் நேற்று முன்தினம் (மார்ச 4 -ம் தேதி ) அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் நிலையில் உள்ள 4 கட்ட தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

முதல் நிலைத் தேர்தல்களில் சம்பந்தப்பட்டத் தேர்தல் அதிகாரியால் வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் மற்றும் 2 -வது கட்ட தேர்தல்களுக்கு மார்ச் 22 -ம் தேதியும், மூன்றாம் கட்டத்திற்கு ஏப்.1 -ம் தேதியும், நான்காம் கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும் வெளியிடப்படவுள்ளது. 

முதல் நிலைக்கூட்டுறவு உறுப்பினர்களின் பட்டியலை சங்கம் வெளியிடவில்லை என்றால் சம்பந்தப்பட்டத் தேர்தல் அதிகாரியே முதல், 2 -வது கட்டங்களுக்கு மார்ச் 22 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.1-ம் தேதியும் 4 வது கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும் உறுப்பினர் பட்டியலை வெளியிடுவார்.

முதல் நிலைக் கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கும் 4 கட்டங்களிலும் வாக்காளர் பட்டியில் உள்ள குறைகள் முதல் கட்டத்திற்கு மார்ச் 25 -ம் தேதியும், இரண்டாம் கட்டத்திற்கு 26 -ம் தேதியும், மூன்றாவது கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும், 4 -வது கட்டத்திற்கு  ஏப் 6 -ந் தேதியும் தெரிவிக்க வேண்டும்.

குறைகள் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி முதல் கட்டத்திற்கு இம்மாதம் 26 -ம் தேதியும், 2 -வது கட்டத்திற்கு 29 -ம் தேதியும், 3 -வது கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 4 -வது கட்டத்திற்கு ஏப் 9 -ம் தேதியும் முடிவு எடுப்பார்.

இறுதி வாக்காளர் பட்டியல் முதல் கட்டத்திற்கு  இம்மாதம் 27 -ம் தேதியும், 2 -வது கட்டத்திற்கு ஏப்.1 -ம் தேதியும், 3 -வது கட்டத்திற்கு ஏப்.6 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.12 -ம் தேதியும் வெளியிடப்படும். வேட்புமனுக்கள் முதல் கட்டத்திற்கு இம்மாதம் 27 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.1.ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப். 9 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.15.ம் தேதியும், காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம். 

வேட்பாளரின் மனுக்கள் பரிசீலனை முதல் கட்டத்திற்கு இம்மாதம் 29 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப். 4 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.9 ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப் 15 -ம் தேதியும் மாலை 4 மணியிலிருந்து 5.30 மணி வரை நடக்க உள்ளது.

வேட்பாளர் பட்டியல் முதல் கட்டத்திற்கு இம்மாதம் 29 -ம் தேதியும் 2 வது கட்டத்திற்கு ஏப்.4 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப். 9 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப். 15 -ந் தேதியும் மாலை  6 மணிக்கு வெளியிடப்படும்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது முதல் கட்டத்திற்கு இம்மாதம் 30 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.10 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.16 -ம் தேதியும் 4 மணிக்குள் நடைபெறும். 

இறுதி வேட்பாளர் பட்டியல் முதல் கட்டத்திற்கு 30 -ம் தேதியும், 2 வது  கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.10 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.16 -ந் தேதியும், மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு தேவையானால் முதல் கட்டத்திற்கு ஏப்.5 -ம் தேதியும், 2 வது கட்டத்திற்கு ஏப்.12 -ம் தேதியும், 3வது கட்டத்திற்கு ஏப்.19 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.27 -ம் தேதியும் நடக்கும்.

வாக்கு எண்ணிக்கை முதல் கட்டத்திற்கு ஏப்.9 -ம் தேதியும், 2 -வது கட்டத்திற்கு ஏப்.16 -ம் தேதியும், 3 வது கட்டத்திற்கு ஏப்.23 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு ஏப்.30 -ந் தேதியும் நடக்கும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே அறிவிக்கப்படும்.

சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் முதல் கட்டத்திற்கு ஏப்.16 -ம் தேதியும, 2 வது கட்டத்திற்கு ஏப்.23 -ம் தேதியும், 3வது கட்டத்திற்கு ஏப்.30 -ம் தேதியும், 4 வது கட்டத்திற்கு மே.6 -ம் தேதியும் நடக்க உள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்